மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்கான அடிக்கல் இன்று நாட்டிவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தொகுதி ரீதியாக ஒரு விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளிற்காக மூன்று பாரியளவிலான அனைத்து வசதிகளுடனான விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான விளையாட்டு மைதானமான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களது முன்மொழிவிற்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் பொது விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்தவைப்பதற்கான அடிக்கல் இன்று (09) நாட்டிவைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்துகொண்டதுடன் 5 மில்லியன் முதற்கட்ட நிதியின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்.
மேலும் இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வாசுதேவன் குருக்கள் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் எஸ்.யோகவேள் மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், மாநகர சபையின் உறுப்பினர்களான சி.சுபராஜ், மதன், ஜெயா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை வடக்கிற்கான தலைவர் கே.காந்தராஜா ஆகியோர் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், மாவட்டத்தில் பாரியதொரு விளையாட்டு மைதானமாக சகல வசதிகளுடனும் அமையப்பெறவுள்ள குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டிவைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours