சம்மாந்துறை வலயம் போல் சவால்கள் நிறைந்த வலயம் இலங்கையில் எங்குமில்லை.கல்விநிருவாகசேவை அதிகாரிகள் மூன்று வருடமாவது சம்மாந்துறையில் பணியாற்றினால் இலங்கையின் எப்பாகத்திலும் பணியாற்றும் திறன் கிடைக்கும்.அப்படி பல சவால்களுக்கு முகம்கொடுத்து வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கல்விசார் உத்தியோகத்தர்களின் அயராத ஒத்துழைப்புடன் பணியாற்றிக்கிடைத்த சரித்திர சாதனையை யாரும் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் கவலை தெரிவித்தார்.
சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் , கடந்த2வருட காலத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுச்சென்ற பத்து கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சேவைநலன்பாராட்டுவிழா, ஒன்றியத்தலைவர் எம்.எ.சபூர்தம்பி தலைமையில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் நேற்றுமுன்தினம் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்மாந்துறை அல்அஸ்ஹர் மகாவித்தியாலய திறந்தவெளியில் நடைபெற்ற இச்சேவைநலன்பாராட்டுவிழாவில் கணக்காளர் சீ.திருப்பிரகாசம் ,பொறியியலாளர் எ.எம்.ஸாஹீர், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.எம்.அமீர், எஸ்.எம்.எம்.ஹைதர்அலி ,பி.எம்.யாசீர் அறபாத், ஏ.எல்.அப்துல்மஜீட் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான ஏ.நசீர், யு.எல்.றியால் ,நிருவாகஉத்தியோகத்தர் எம்.ஜ.எம்.முஷரப் ஆகியோர் கௌரவஅதிதிகளாகக்கலந்துகொண்டனர்.
,
ஓய்வுபெற்றுச்சென்ற திருமதி மகா.செல்வராஜா எம்.ஏ.அப்துல்றசூல் ,பி.இஸ்மாயில், பி.சிறாஜூதீன் ,எ.அச்சிமொஹமட் ,கே.செல்வராஜா ,எ.அப்துல்றஹீம், எம்.எஸ்.அப்துல்அசீஸ், யு.அப்துல்மஜீட் ,எம்.எம்.அப்துல்சத்தார் ஆகிய பத்து உத்தியோகத்தர்கள் பொன்னாடைபோர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
ஓய்வுபெற்ற பத்து உத்தியோகத்தர்களைப்பாராட்டி கோட்டக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.மஹ்மூட்லெவ்வை, உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியஆலோசகர் இசட்.எம்.மன்சூர் கவிதைபாடி அசத்தினார்.
அங்கு பணிப்பாளர் நஜீம் மேலும் பேசுகையில்:
கிழக்கு மாகாணத்திலுள்ள 13கல்வி வலயங்களில் பின்தங்கிய பிரதேசங்களையும் கொண்டு சரித்திரசாதனை படைத்தது எமது சம்மாந்துறை வலயம் என்பதை யாரும் மறுதலிக்கமுடியாது.அதற்காக தோளோடுதோள் நின்று உழைத்த முக்கிய பங்காளிகள் நீங்கள். கடந்த 10வருட பொதுப்பரீட்சைப்பெறுபேறுகள் சாதனைகள் அதற்கு சான்றுபகரும். ஆனால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் சிறுசறுக்கல் வரும்போது பொறாமைபிடித்த ஒருசில எதிரிகள் தூக்கிப்பிடித்துக்கொண்டு தூற்றுவார்கள். விமர்சனம் பண்ணுவார்கள்.
86ஆகவிருந்த தரம்5புலமைப்பரிசில் பரீட்சை சித்திகளை எமது 8வருடப்போராட்டத்தில் 207ஆக மாற்றி சாதனைபடைத்துள்ளோம். 2016இல் 44வீதமாகவிருந்த க.பொ.த..சா.தரப்பரீட்சைப்பெறுபே றுகளை 2020இல் 64வீதமாக உயர்த்தியுள்ளோம்.அதேபோன்று பல்கலை அனுமதிகளை 20வீதத்தால் உயர்த்தியுள்ளோம்.
2015இல் க.பொ.த சாதர கணிதபாடத்தில் 74வீத சித்தியைப்பெற்று அகிலஇலங்கைரீதியில் முதலிடம் பெற்றோம். அதற்காக உழைத்த கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரேமானந்தா, ஆசிரியஆலோசகர் சிறாஜூதீன் உள்ளிட்ட கணிதபாட ஆசிரியர்களை மறக்கமுடியாது.24மாணவர்கள் 9ஏ சித்திபெற்றார்கள். முழுஇலங்கையுமே சம்மாந்துறையை திரும்பிப்பார்த்தது.
அதேபோல் 2016இல் க.பொ.த உயர்தரத்தில் 12மாணவர்கள் மருத்துவபீடத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்தார்கள். இதனைக்கண்டு சகிக்கமுடியாமல் பொறாமைபிடித்தவர்கள் எதிரிகள் சம்மாந்துறை சாதனைப்பெறுபேற்றுக்கு களங்கம் ஏற்படுத்தி கரிபூசமுனைந்தார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.
பரீட்சைஆணையாளருக்கு பிட்டிசம் எழுதினார்கள். அவர்களுக்குத் தெரிந்தது பிட்டிசம் எழுதுவதும் மற்றவர்களை மட்டம்தட்டி படுகுழியில் வீழ்த்துவதுமே.
இறைவன் பெரியவன். அனைத்தும் தவிடுபொடியாகின.அடுத்த உயர்தரப் பரீட்சைக்கு சம்மாந்துறைக்கு மட்டும் மேலதிக மேற்பார்வையாளர்களை நியமித்தார்கள். வெளிமாவட்டத்திலிருந்து வந்த மேலதிக மேற்பார்வையாளர்கள் பரீட்சாத்திகளை சல்லடைபோட்டு சோதனைசெய்தார்கள்.
பல நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் எமது மாணவர்கள் சளைக்கவில்லை மசியவில்லை. சுயபுத்தியை பயன்படுத்தி நன்றாக எழுதி அந்தமுறை மேலும் நல்ல பெறுபேற்றைக்காண்பித்தார்கள்.
கற்றகல்வியை களவாடமுடியாது மூளையை குழப்பமுயற்சித்தார்கள். எனினும் 15 மாணவர்கள் பொறியியல்துறைக்குத் தெரிவானார்கள். இறக்காமத்திலும் 2பேர் மருத்துவத்துறைக்கும் 4பேர் பொறியியல்துறைக்கும் தெரிவாகி சாதனை படைத்தார்கள். இது சாதனை. 2020இல் அதிகூடிய 20பேர் பொறியியல்துறைக்கு தெரிவானர்கள்.
இந்த சரித்திர சாதனை யாருக்கும் தெரியாது. யாரும் இதனைக்கண்டுகொள்ளவில்லை. இறைவன் போதுமானவன். உங்களது அர்ப்பணிப்பு தியாகம் வீண்போகவில்லை. சவால்களுக்கு மத்தியில் வேலைசெய்வதையே நான்விரும்புகிறேன். அப்படியென்றால்மட்டுமே சிற்நத அனுபவத்தை பெறலாம்.சாதனையை எட்டலாம்.அதில்தான் மகிழ்ச்சிஇருக்கிறது. எமது வலயகல்விஅபிவிருத்திக்காக உழைத்து ஓய்வுபெற்ற உங்களை வலயம் சார்பில் மனதார வாழ்த்துகிறேன். என்றார்.
நலன்புரி ஒன்றியத்தினர் பணிப்பாளரின்சேவையைப்பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.ஒன்றியபொருளாளர் கே.இரத்னேஸ்வரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒழுங்கமைத்திருந்தார். பணிப்பாளர் நஜீம் ,பொறியியலாளர் எ.எம்.ஸாஹீர், ஆசிரியஆலோசகர் எ.எச்.எம்.ஸவாஹிர் ஆகியோர் பாடல்பாடி அசத்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours