(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்)
அரை நூற்றாண்டு காலமாக கல்வி, கலாசார மற்றும் சமூகப் பணியாற்றி வருகின்ற அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதி தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி (எம்.ஏ.) அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (06) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.கமர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காஸிம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக், பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.சலீம், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் கவிஞர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புஹாரி, அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி நிர்வாக சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் யூ.எம்.நியாஸ், மௌலவி எம்.எல்.பைசல் உள்ளிட்டோர் சிறப்புரை, நயவுரை மற்றும் கருத்துரைகளை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், திடீர் சுகவீனம் காரணமாக வருகை தர முடியவில்லை எனத் தெரிவித்து, அவர் ஆசிச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அதனை கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் நிகழ்வில் வாசித்துக் கையளித்தார்.
மேலும், மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியின் 50 வருட கல்வி, சமூகப் பணியின்போது அவர் சேவையாற்றிய அறபுக் கல்லூரிகள், பாடசாலைகள், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட உலமா சபைகள், பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் அவற்றின் பிரதிநிதிகளாலும் தனது பழைய மாணவர்கள் பலரினாலும் நினைவுச் சின்னங்கள், பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை, தன்னை தனது மாணவர்கள் கௌரவிக்கின்ற சந்தர்ப்பத்தில், தன்னை புடம் போட்ட ஆசானை கௌரவிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் விழாவின் கதாநாயகன் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி அவர்கள், தனக்கு கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் கற்பித்த அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஹாஷிம் (எம்.ஏ.) அவர்களை விசேடமாக கௌரவித்து, நன்றி பாராட்டிய நிகழ்வும் இதன்போது ஓர் அங்கமாக இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours