மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திர காந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் ஆகியோரின் இணைத்தலைமைத்துவத்தில் இன்று (01) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் கோவிட் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றி மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு இக்கூட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்திலிருந்து கொவிட் 19 தொற்றினை முற்றாகக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும், இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சகல தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளவேண்டுமெனவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ. சுகுனன் கேட்டுக்கொண்டார்.
அரசின் கிராமத்துடன் கலந்துரையாடல் எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் அபிவிருத்தித் திட்டங்கள் நாடளாவியரீதியில் எதிர்வரும் வியளக்கிழமை காலை 8.52 மணியாகிய சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதற்கமைவாக இம்மாவட்டத்திலும் சகல கிராமசேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 5 வாழ்வாதார, உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் இச்சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மேலும் இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழு இனைத்தலைவர் ப. சந்திரகுமார், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் மற்றம் இராணுவ தரப்பு பிரதானி, ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours