அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் அதிகமாக இருப்பதனால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கூறி அம்பாறையில் மேலதிக அரசாங்க அதிபராக தமிழ் சகோதரர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார்.அதே போல், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரையும், நான்கு செயலகங்களின் செயலாளர்களாக முஸ்லிம்களையும் நியமிக்க வேண்டுமென கிழக்கின் கேடயம் கோரிக்கை முன்வைக்கிறது.
இன்று (12) கிழக்கின் கேடயத்தின் பிரதான செயற்பாட்டாளரும், அக்கரைப்பற்று மாநகர உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடும் போது,
மட்டக்களப்பில் முஸ்லிங்களுக்கும் அதே நிலைதான் இருக்கிறது. அங்கு ஒரு மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் சகோதரர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையையும், மட்டக்களப்பில் உள்ள நான்கு முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கும் முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல எம்.பிக்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாபிழ் இஸட். நஸீர் அஹமட் கடந்த காலங்களில் மட்டக்களப்பில் முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நடக்கும் அநீதிகள் தொடர்பில் பொதுவெளிக்கு முன்வந்து வெளிப்படையாக பேசியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி காரியாலயத்திற்கு முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரியை நியமிக்க கோரிக்கை முன்வைத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் அரசியல் அழுத்தம் கொடுத்து தமிழ் சகோதரர் ஒருவரை அந்த வெற்றிடத்திற்கு நியமித்துள்ளார்கள்.
அதன் பின்னர் ஏறாவூர் நகரசபையில் உள்ள முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் வாகரை பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டபோது அதனை உடனடியாக இடைநிறுத்தி அந்த வெற்றிடத்திற்கும் தமிழ் சகோதரர் ஒருவரை நியமித்துள்ளார்கள். இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அநீதிகளானது உண்மைக்கு புறம்பாக மட்டுமின்றி நீதிக்கு புறம்பாகவும் இருக்கிறது. இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக உள்ள தமிழ் சகோதரர் ஒருவரை எந்த வெற்றிடத்திற்கும் எங்கும் நியமிக்கலாம். ஆனால் மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை அவர்களது தகுதிக்கு ஏற்ற இடங்களில் சேவையாற்ற வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இங்கு எங்களினால் இனப்பாகுபாடு பார்க்கப்படவிலை. நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டுங்கள் என்றே கேட்கிறோம்.
இது தொடர்பிலான கோரிக்கை மகஜரை முஸ்லிம் எம்.பிக்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களிடம் கையளித்துள்ளதாக அறிகிறோம். மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் மிகக்கவனமாக தங்களுடைய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மட்டக்களப்பில் உள்ள நிறைய பிணக்குகளுக்கு தீர்வாக முஸ்லிம் மேலதிக அரசாங்க அதிபர் நியமனமும், மட்டக்களப்பில் உள்ள நான்கு முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கும் முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படுவதன் மூலம் அமையும் என்று நம்புகிறோம். யார் பாதிக்கப்பட்டாலும் அநீதிகளை கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்பது மனித இயல்பாக அமையாது. அநீதிகள் இழைக்கப்படும் விடயத்தில் கிழக்கின் கேடயம் தொடர்ந்தும் ஜனநாயக ரீதியாக குரல்கொடுத்து போராடும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours