(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிறுபான்மை சமூகத்தின் ஆன்மீகத் தலைமையொன்று சமூகத்தையும் அரசியல் தலைமைகளையும் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதற்கு ஆதம்பாவா ஹஸரத் ஓர் உதாரண புருஷராகத் திகழ்கிறார் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் மற்றும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழா என்பன ஞாயிற்றுக்கிழமை (06) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றபோது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

பெரும்பான்மையினரால் ஆளப்படுகின்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைமையொன்றின் செயற்பாடுகளும் கடமைகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு ஆதம்பாவா ஹஸரத் ஓர் உதாரண புருஷராகத் திகழ்கிறார். பல்லின சமூகம் வாழ்கின்ற இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுகின்ற சேதாரங்களைக் குறைத்துக் கொண்டு எவ்வாறு நமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எமது அரசியல் தலைமைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் சிறந்த வழிகாட்டியாக செயற்பட்டு வருகின்றார்.

இதனை மையப்படுத்தியே 2001ஆம் ஆண்டு தொடக்கம் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலம் தொட்டு ஆதம்பாவா மௌலவியுடன் இரண்டறக் கலந்து செயற்பட வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது. அவர் எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தலைவர் திடீரெனெ மறைந்த நிலையில் சமூகம் துவண்டு கிடந்தபோது கட்சியின் கட்டுக்கோப்பையும் சமூக நலன்களையும் முன்னிறுத்தி வழிக்காட்டுகின்ற பெரும் பகிபாகத்தை ஆதம்பாவா ஹஸரத் பொறுப்பேற்றிருந்தார்.

சிங்கள சமூகத்தின் அரசியல் தலைமையையும் நாட்டையும் வழிநடாத்துவதில் எவ்வாறு பௌத்த மகாநாயக்க தேரர்களின் வகிபாகம் இருக்கிறதோ அவ்வாறே முஸ்லிம் சமூகத்திற்கு எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி தலைமையிலான சிரேஷ்ட உலமாக்களின் வகிபாகம் இருந்து வருகின்றது. இந்த விடயத்தில் பல சவால்கள் எழுகின்ற போதிலும் அவர் மிகவும் துணிச்சலுடன் இப்பொறுப்பையேற்று, நேர்மையாக செயற்பட்டு வருகின்றார்.

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசு- புலிகள் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது அவற்றைக் கட்டுப்படுத்துமாறு கோரி பாராளுமன்ற பகிஷ்கரிப்பு, பாதை யாத்திரை என்றெல்லாம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வேளைகளில் எல்லாம் எம்முடன் முகாமிட்டு, மஷூரா அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு அவர் முக்கிய பங்காற்றிருந்தார்.

அவ்வாறே புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடனான முஸ்லிம் காங்கிரஸின் பேச்சுவார்த்தையாயினும் சரி, அரசியல் ரீதியான வேறு எந்த நடவடிக்கையாயினும் சரி தேர்தல் மற்றும் சமூகத்திற்கான பிரதிநிதித்துவ அதிகரிப்பாயினும் சரி, ஆதம்பாவா மௌலவியின் வகிபாகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. ஏனென்றால் இந்த விடயங்களில் எல்லாம் தேவையான எதிர்வுகூறல்களை வழங்கக்கூடிய வல்லமையை இறைவன் அவருக்கு வழங்கியிருக்கிறான். அவ்வாறான சக்தி அவரிடம் இருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாங்கள் நேரடியாக கண்டிருக்கிறோம்.

முஸ்லிம் சமூகம் எப்போதும் தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதிலும் இன்னொரு சமூகத்தினதோ சர்வதேசத்தினதோ நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டு விடக்கூடாது என்பதிலும் மிகத்தெளிவாக இருந்து வருகின்ற ஓர் ஆன்மீகத் தலைமையாக அவரைக் காண்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் பெரும் சவால்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கியிருக்கின்ற சூழ்நிலையில், நாங்கள் அவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுத்து, சமூகத்தை பாதுகாப்பதற்கு புத்திசாதுர்யமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அரசியல் தலைமைகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் வழங்கி வருகின்ற ஆலோசனைகள் மிகப் பெறுமதியானவையாகும்.

சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், சர்வதேச நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குள் முஸ்லிம் சமூகம் மாட்டி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து வருகின்ற ஆதம்பாவா மௌலவி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்களில் தெளிவுபடுத்தி, தைரியமாக வழிநடாத்தப்பட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகின்றார்.

கடந்த மாதம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்நடத்துவது என்ற போர்வையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான மறைமுக திட்டமொன்று அரங்கேற்றப்பட்டபோது அதிலுள்ள சூழ்ச்சிகளை அவர் சரியாக கணிப்பிட்டிருந்தார். அதனால்தான் அதனுடைய விளைவு, ஆபத்துகளை பற்றி நாங்கள் பேசியபோது எமது நிலைப்பாட்டிலுள்ள நியாயங்களை அவர் உணர்ந்திருந்தார்.

அந்த நகர்வு ஒரு சர்வதேச சூழ்ச்சி, அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற சர்வதேச சதிக்குள் நாம் வீழ்ந்து விட முடியாது.

புலிகளின் ஆயுத போராட்ட காலத்தில் கூட பாதுகாக்கப்பட்ட முஸ்லிம்களின் மத உரிமை, இன்று அமைதி, சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில், அந்த உரிமையை மறுக்கின்ற அளவுக்கு ஒரு படித்த சமூகத்தினரால் திருமலை ஷண்முகாவில் ஒரு முஸ்லிம் ஆசிரியையின் அபாயாவை அகற்ற வேண்டும் என்று காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இதனை வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுகின்ற தலைமைகள் கண்டுகொள்ளாமல், மௌனித்து, தலைகுனிந்திருப்பதானது முஸ்லிம் சமூகத்தை பாரதூரமாக சிந்திக்க வைத்துள்ளது- என்றார்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றிருந்ததுடன் லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக், பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.சலீம், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் கவிஞர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புஹாரி, அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி நிர்வாக சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் யூ.எம்.நியாஸ், மௌலவி எம்.எல்.பைசல் உள்ளிட்டோர் சிறப்புரை, நயவுரை மற்றும் கருத்துரைகளை நிகழ்த்தினர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours