(காரைதீவு  சகா)

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின்    130வது ஜனனதினத்தை முன்னிட்டு அவர் பிறந்த காரைதீவு மண்ணில் " ஒஸ்கார்"( AUSKAR) (அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்) சுவாமி விபுலாநந்தர் நினைவுப்பேருரையுடன்கூடிய  பரிசளிப்புவிழாவை நேற்றுமுன்தினம் ஞாயிறன்று(27) காரைதீவு விபுலாநந்த மணி மண்டபத்தில் நடாத்தினர்.

சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் திருமுன்னிலைஅதிதியாக இ.கி.மிசன் மட்டு.மாநில மேலாளர்  ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ மஹராஜ் கலந்து சிறப்பித்தனர்.

'தமிழ்க்கல்வியும் தமிழில்கல்வியும்' என்ற மகுடத்தில் சுவாமி தொடர்பான நினைவுப்பேருரையை கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் சி.மௌனகுரு காணொளி மூலம் நிகழ்த்தினார்.
 கௌரவஅதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் சிறப்பு அதிதிகளாக பணிமன்ற தலைவர் வி.ஜெயநாதன் கோட்ட கல்வி பணிப்பாளர் ஜே.டேவிட் ஆலய ஒன்றிய தலைவர் இ.குணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுவாமியின் 130வது ஜனனதினத்தையொட்டி ஒஸ்கார் அமைப்பினர் ஏலவே காரைதீவுக்கோட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலை  மாணவர்களிடையே  பேச்சு கட்டுரை சித்திரம் பாவோதல் ஆகிய தமிழ் இலக்கிய ஆக்கத்திறன் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தியிருந்தனர். போட்டி நிகழ்ச்சிகளில்  வெற்றிபெற்ற மாணவர்க்கான பெறுமதிமிக்க பணப்பரிசுகள் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.

இதற்காக ஒத்துழைத்த ஒஸ்கார் சர்வதேச இலங்கை மற்றும் காரைதீவு குழுவினருக்கு நன்றிகள்  என அவுஸ்திரேலியாவிலிருந்து ஒஸ்கார் செயலாளர் அ.மகேந்திரன்(கட்டடக்கலை நிபுணர்) தெரிவித்தார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours