(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
75 ஆவது சுதந்திர தின பவள விழா நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் 75 இலட்சம் மரங்களை நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட இருக்கின்ற 75 ஆவது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின்னூடாக
இவ் வருடம் பூராவும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டம் பூராகவும் மரநடுகை நிகழ்வு
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் மரங்களை நடும் வேலைத்திட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பனிச்சையடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட செயலக மூசிக விநாயகர் ஆலய வளாகத்தில் (22) திகதி நேற்றைய தினம் பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மோகன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த மரநடுகை நிகழ்வில் மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், மாவட்ட செயலக ஊடக அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலக நிதி மற்றும் ஊடகப்பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours