மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட செயலமர்வு இன்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி. றிஸ்வானி றிபாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெசிதா முரலிதரன், மாவட்ட அரசாhங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுனன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 

இதன்போது சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில், அனாதைகள், ஆதவற்ற மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான சேவையினை ஆற்றிவருகின்ற சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களம் திருகோணமலையில் தலைமைக் காரியாலத்தினையும், கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும் 13 உப காரியாலயங்களைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. 

இதனூடாக கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்தி 272 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 875 சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இம்மாகாணத்தில் காணப்படும் 53 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 31 இல்லங்கள் காணப்படுகின்றன. 

இவற்றில் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம் என்பவற்றிக்குள்ளான சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். மேலும் குற்றமிழைத்த பிள்ளைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார். 

இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் கருத்து தெரிவிக்கையில் பெரியோர்களால் சிறுவர்கள் பாதிக்கபடுவதாக சிறுவர் பராமரிப்பு, பொலிஸ் திணைக்களம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்தகால அறிக்கைகள் மூலம் நாம் அறிந்துவருகின்றோம். இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல. அரசின் கொள்கையின் அடிப்படையில் சிறுவர்பராமரிப்பிற்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இம்மாவட்டத்தில் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களை சாதாரண சூழ்நிலையில் வாழவைக்கவேண்டும். அதற்காக துறைசார்ந்த அனைவரினதும் சிந்தனைகளையும் ஒன்று செலுத்தி செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்களப் பிரிவினர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர். 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours