(எஸ்.அஷ்ரப்கான் - 076012 3242)



ஜனாதிபதி எடுத்த தவறான முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

அண்மைய ஜனாதிபதியின் உரை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடும் போது,

ஜனாதிபதியின் உரையின் போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகள் எதனையும் முன்வைக்கவில்லை.
வழமைபோன்று யுத்த வெற்றியில் ஆரம்பித்து கொரோனாவை காரணம் காட்டி கடந்த ஆட்சியாளர்களை குற்றம்சாட்டி உரையை முடித்தார்.

உண்மையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு  பிரதான காரணம்  ஜனாதிபதி 2019 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தனது புகழுக்காக வரியை குறைத்து அரசின் 600 பில்லியன் வருமானத்தை இழக்கச்செய்ததே.

அதன்பின் செயற்கையாக டொலரின் பெறுமதியை 200 ஆக கட்டுப்படுத்தி வைத்திருந்ததால் வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் உண்டியல் முறை மூலம் பணப்பரிமாற்றம் செய்ததால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய டொலர் இழக்க நேரிட்டது.
 
கொவிட் தாக்கத்தால் உயிரிழந்த உடல்களை வலுக்கட்டாயமாக எரித்ததால் மத்திய கிழக்கு நாடுகள் எதுவும் எரிபொருள் நிவாரணம் தர முனவர்வில்லை.இப்போது எரிபொருளுக்காக இந்தியாவிடம் மண்டியிட்டு நாட்டின் ஒருபகுதியை இந்தியாவுக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதுபோன்று கொவிட் தாக்கமும் இதற்கு காரணம் என ஜனாதிபதி  கூறி இருந்தார். உண்மையில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையில் மட்டுமே கொவிட் காலத்தில் டொலர் கையிருப்பு குறைந்துள்ளது. ஏனைய நாடுகள் அனைத்திலும் அதிகரித்தே காணப்படுகிறது.
ஆகவே இதுவும் அவர் கூறிய மற்றுமொரு தவறான உதாரணம். 
பொய்கள் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மீண்டும் மீண்டும் பொய்களை கூறி தனது இயலாமையை மறைக்க முயல்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டே இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வு கூறி சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு அரசாங்கத்திடம் கூறி இருந்தோம்.நாம் ஒரு போதும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லமாட்டோம் என கூறியிருந்த அரசாங்கம் இன்று நாடு வங்குரோத்து அடைந்த பின் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல தீர்மானித்துள்ளது.அன்றே எமது ஆலோசனையை கேட்டிருந்தால் இன்று இந்த நெருக்கடிகளை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours