கொவிட் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்றும் எந்தவொரு மையவாடிகள், மயானங்களிலும் அடக்கலாம் - என அரசு திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளமைக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியான ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாக,
கொவிட் தொற்றினால் மரணிப்போரின் சுகாதார ஊழியர்களால் உடல்கள் சீலிடப்பட்டு , சவப் பெட்டியில் வைக்கப்படும் . ( உறவினர்களால் சவப்பெட்டி வழங்கப்பட வேண்டும் ) உடல் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் அல்லத் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளமை மூலம் எமது கட்சியால் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விடுத்த கோரிக்கைக்கு கௌரவம் கிடைத்துள்ளதன் மூலம் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட முதலாவது முஸ்லிம் கட்சி என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறோம்.
கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அந்தந்த ஊர்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவரால் கடந்த 2021 நவம்பர் மாதம் 19ந்திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அநுராத புரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேரடியாக நேரடியாக சந்தித்த போது கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு ஜனாதிபதி அவர்கள் சாதகமாக பதில் தந்திருந்தார். இது பற்றி கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கமைய தற்போது சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவித்தலின் படி இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
ஐக்கிய காங்கிரசின் கோரிக்கையை ஏற்று இத்தனை விரைவாக அந்தந்த ஊர்களில் அடக்கம் செய்ய அனுமதி தந்தமைக்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அவரது அரசுக்கும் நன்றி தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours