(சுமன்)
தமிழரசுக் கட்சியில் தற்போது தந்தை செல்வா போல் ஒரு தலைவரைக் கூட காணமுடியாதிருப்பது வேதனையான விடயம். தந்தை செல்வா கடைப்பிடித்த சில நடைமுறைகள் இராஜதந்திரம் என்ற போர்வையிலே மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் 124வது ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைத்த பெருமகன். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைத் தாபித்தது மாத்திரமல்லாமல் இலங்தைக் தமிழ் மக்கள் எல்லோரையும் தேசியத்தின் பால் ஒன்றிணைத்தவர் தந்தை செல்வா.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டால் தான் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெறலாம் என்ற அடிப்படையில் தன்னோடு எதிர்த்து நின்றவர்களையும் இணைத்தார். தன்னைச் செவிடன் என்று கூறியவர்களைக் கூட ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் பயணிக்கச் செய்து தமிழர்களுக்கான விடிவைப் பெறுவதற்கு அவர் முயற்சித்தார்.
தந்தை செல்வா என்ற பெயரை இன்றும் எல்லோரும் நினைவு கூருகின்றார்கள் என்றால் அவரது நீதி, நேர்மை, நியாயம் தமிழர்களுக்காக அவர் உழைத்த அயராத உழைப்பு தான் காரணமாக இருக்கின்றது. இன்று அகிம்சை ரீதியாக அவரைப் போல் ஒரு தலைவரைக் கூட நாங்கள் காண முடியாதுள்ளது. தமிழரசுக் கட்சியிலும் தற்போது அவரைப் போல் ஒரு தலைவரைக் கூட காணமுடியாது இருக்கின்றது. அது தான் வேதனையான விடயம்.
இன்னுமொரு கவலை என்னவென்றால் தந்தை செல்வா கடைப்படித்த சில நடைமுறைகள் இராஜதந்திரம் என்ற போர்வையிலே மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன. தந்தை செல்வா காலம் தொடக்கம் இலங்கையின் சுதந்திர தினத்திற்கு நாங்கள் சென்றதில்லை, தேசியக் கொடியையும் ஏந்தியதில்லை. ஆனால் இராஜதந்திரம் என்ற ரீதியில் அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் இதுவரை தமிழர்களுக்கு எந்த முடிவையும் நாங்கள் பெற்றுக் கொடுக்கவில்லை.
ஆனாலும் தமிழரசுக் கடசி இன்றுவரை தமிழ் மக்களின் விடிவுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றது. தந்தை செல்வாவின் கனவை நிறைவேற்றறும் பாதையில் நாங்கள் அயராது நின்று உழைப்போம் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours