தமிழ் மக்கள் எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கலைபண்பாடு, எமது நிலம் சார்ந்து தனித்துவமான சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை பெறும் வகையில் இந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் இன்றைய நிலைமைகள் குறித்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

''இன்றைய நிலையில் தமிழ் மக்களும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களும் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்பகுதி சிங்கள மக்களின் 69இலட்சம் வாக்குகளால்தான் தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதாகவே கோட்டாபய பல முறை பெருமையாகக் கூறினார்.

இதே 69இலட்சம் மக்களும் இன்று திரண்டு அவர் வேண்டாம் “கோட்டாபய வீட்டுக்குப்போ” என்று பகிரங்கமாகவே போராட்டம் செய்யும் நிலையில் தமிழ்மக்களாகிய நாம் இந்த ஜனாதிபதியை எப்போதுமே ஏற்கவில்லை என்பதைக் கருத்தில் எடுத்து தென்பகுதி மக்களின் போராட்டத்தை அவதானிக்க வேண்டும்.

எம்மை பொறுத்தவரை கோட்டாபய ராஜபக்சவை மாற்றிவிட்டு சஜீத்பிரமதாசவை ஜனாதிபதியாக நியமிப்பதாலோ அல்லது அனுரகுமார திசநாயக்கவை ஜனாதிபதியாக நியமித்தாலோ பெயரும் முகமும் மட்டுமே மாறும்.

அவர்களின் அடிமனதில் உள்ள இனவாதம் பௌத்த மேலாண்மை சிந்தனை மாறாது. எனவே தமிழ் மக்கள் எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கலைபண்பாடு, எமது நிலம் சார்ந்து தனித்துவமான சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை பெறும் வகையில் இந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் அரசைக் காப்பாற்றவோ, எதிர்க்கட்சிகளைக் காப்பாற்றவோ பங்களிப்புகளை வழங்காமல் நாம் நாமாக அரசியல் பணிகளைச் செய்யவேண்டும்.

தமிழ் மக்கள் இளைஞர்களும் பகடைக்காய்களாக மாறாமல் இலங்கையில் நடக்கும் இந்த செயல்களை அவதானித்து பார்வையாளர்களாக இருப்பதே நல்லது. அதேவேளை அரசுக்கு எதிரான கவன ஈர்ப்பு போராட்டங்களில் தமிழ் மக்கள் செய்வதும் தவறில்லை.

தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திடம் அழுத்தம் கொடுத்து எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours