கும்பாபிஷேக பிரதமகுருவாக ஆலயபிரதமகுருவும் கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியாரியாருமான சிவாகம வித்யாபூஷணம் சிவாச்சார்ய திலகம் பிரதிஸ்டாதிலகம் ஜோதிடவித்யாதத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் செயற்படுகிறார்.
கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கு கர்மாரம்பத்துடன் கிரியைகள் யாவும் ஆரம்பமாகின. எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் திங்கள்(4)காலை 8மணி முதல் நேற்று செவ்வாய்க்கிழமை(5) பி.ப.3மணிவரை நடைபெற்றது.
இன்று மஹா கும்பாபிஷேகம் 6ஆம் திகதி புதன்;கிழமை காலை 9.12மணிமுதல் 10.27மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற அருள்பாலித்துள்ளது.
ஆலயகுரு சிவஸ்ரீ ச.ஹோவர்த்தன சர்மா ஒழுங்கமைப்பில் சர்வசாதகராக ஆரியபாஷாவிற்பன்னர் சிவஸ்ரீ சண்முக மயூரவதனக்குருக்களும் பிரதிஸ்டா குருவாக கிரியாஜோதி சிவஸ்ரீ வே.யோகராசாக்குருக்களும் செயற்பட மகேஸ்வரபூஜையை கோ.ஜனபாலச்சந்திரன்(அவுஸ்திரேலி யா) வழங்கவுள்ளார்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 24தினங்கள் மண்டலாபிசேக பூஜைகள் இடம்பெறுமென ஆலயநிருவாகசபையினர் தெரிவித்தனர்..
அமைவிடம்
இலங்கையில் இருக்கும் ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயமான அம்பாறைமாவட்ட நிந்தவூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மருதநிலசூழலில் எழுந்தருளி மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம் சுமார் 500வருடங்களாக அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது .
சுற்றவர பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளுக்கு மத்தியில் ஆலமரம் அரசமரம் மாமரம் கமுகு வில்வை மரம் தென்னை மரங்கள் நிறையப்பெற்ற ஒரு மனோரம்மியமான தண்மையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளதும் சிறப்புத்தான். அங்கு சென்றவர்கள் உடனே திரும்பமுடியாதளவிற்கு அந்த சூழல் பக்தர்களைசுண்டி ஈர்க்கிறது.
ஆலயவரலாறு
போத்துக்கீசர் காலத்தில் அதாவது 15ஆம் நூற்றாண்டு காலத்தில் 1624 காலப்பகுதியில் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அக் காலத்தில் சிற்சில பிராந்தியங்களில் வன்னிமையின் சிற்றாட்சி நிலவியது.
அட்டப்பள்ளத்தை மையமாகக்கொண்டு நிந்தவூர் பற்று வன்னிமையான சிங்காரபுரி வன்னிமை ஆட்சி நிலவியது. சிங்காரபுரித்தோட்டத்தில் இருந்து அந்தக்காலத்தில் அட்டப்பள்ளம் தொடக்கம் காரைதீவு வரையான பிரதேசத்தை பூபாலகோத்திரத்து வன்னிமை பரிபாலனம் செய்துவந்தான்.அதனை சிங்காரத்தோப்பு எனக்கூறுவர்.அங்கிருந்து வன்னிமை யானை மீதேறி அப்பிரதேசமெங்கும் வலம்வருவது வழமை.ஒரு தடவை காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு யானையில் வந்து வணங்கியபோது இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் கண்பார்வையை இழந்த தனது மனைவிக்கு அம்மனின் அருளால் கண்பார்வை கிடைத்தமைக்காக காணிவழங்கிய நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.அதனை கண்கண்டவெளி என்று பெயரிட்டனர்.அது கண்கண்வெளி என மருவிற்று. இவையெல்லாம் கற்பனைக்கதையல்ல. அனைத்திற்கும் ஆதாரபூர்வமான பதிவேடுகளுள்ளன.மேலும் பண்டிதர் வீ.சீ.கந்தையா உள்ளிட்ட பலர் எழுதிய பல நூல்களில் காணலாம்.
16ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் காளி ஓடையின் அருகே காளிகோயில் இருந்ததாக வரலாற்று ஆய்வுகளும் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
சிங்காரபுரி வன்னிமை இந்த மடத்தடி எனும் இடத்தில் ஆலயமொன்றை அமைத்து அருகில் தீர்த்தக்கேணியையும் அமைத்து வழிபட்டுவந்தான் .அதேசூழலில் அவனது மாளிகை அமைந்திருந்த காரணத்தினால் அருகே பாதுகாப்பிற்காக செங்கண்படை ஒன்றையும் வைத்திருந்தான். அவனது மாடுகள் பட்டிபட்டியாக அந்தச்சூழலில் வளர்க்கப்பட்டன.
இவைதான் இன்று இவ்வாறு மருவி அழைக்கப்படுகின்றன.
பிற்காலத்தில் 'காளி ஓடை' என்பது 'களியோடை' என்றும் 'செங்கண்படை' என்பது 'செங்கப்படை' என்றும் சிங்காரபுரித்தோட்டம் என்பது 'தோப்புக்கண்டம'; என்றும் வன்னிமையின் மாடுகள் வளர்க்கப்பட்ட இடம் மாட்டுப்பளை என்றும் தற்போது அழைக்கப்படுகிறது.
இவ்வாலயமானது போத்துக்கீசர் ஆட்சிக்காலத்தின் பிற்கூற்றில் புளியந்தீவிலிருந்துவந்த படைகளினால் சேதமாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.அக்காலகட்டத்தி ல் திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்கள் போத்துகீசரால்; சேதமாக்கப்பட்டமை தெரிந்ததே. அது வரலாறு. அவ்வாறு அழிக்கப்பட்ட் ஆலயத்தின் எச்சசொச்சங்களை சிதைவுகளை இன்றும் புதியஆலயத்தின் மேற்கே காணலாம்.சிதைவுக்குள்ளான நீர்க்கேணியையும் காணலாம்.
ஆலயகலாசாரம்
இங்கு ஆலயத்தைச்சூழ பாம்புப்புற்றுகள் நிறையவுள்ளன. அதாவது இங்கு அம்மன் வழிபாட்டிற்கு மேலதிகமாக நாகவழிபாடும் நிலவுகிறது.
வெள்ளி பௌர்ணமி மற்றும் விசேட தினங்களில் இங்கு கதவு திறந்து அம்மனுக்கு பொங்கல் செய்வது வழக்கம்.அந்நாட்களில் இங்கு 1000க்கு மேற்பட்ட பகதர்கள்ஒன்றுகூவது அம்மனின்அற்புதமே. பூரணையன்று அங்கு கண்டெடுக்கப்பட்டு பிரதிஸ்டை செய்த சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பூச்சொரிந்து வழிபடுவர்.
பரிபாலன வரலாறு;
ஆரம்பத்தில் இது தனியார் ஆலயமாகவிருந்தது. அதாவது ஒரு குடும்பத்திற்குரிய சொந்த ஆலயமாக இருந்தது. 1985களில் இவ்வாலயம் பதியப்பட்டிருந்தது.தம்பிமுத்து என்பவரின் சொந்தப்பராமரிப்பிலே இயங்கிவந்தது.பிற்பட்ட 1990களில் தம்பிமுத்து என்பாரின் ஏகபுதல்வரான வினாயகமூர்த்தி அவர்கள் தொடர்ந்து தன்னந்தனியனாக அவ்வாலயத்தை பராமரித்துவந்தார்.
1996களிலிருந்து இவ்வாலயம் காரைதீவை மையமாகக்கொண்டு பலகிராமங்களின் பலபிரமுகர்களைக்கொண்ட நிருவாகசபையினரால் பொதுக்கோயிலாக நிருவகிக்கப்பட்டுவந்தது.
காரைதீவைச்சேர்ந்த திரு வினாயகமூர்த்தி என்பார் பலவருடகாலம் பலரது உதவியையும் பெற்று பரிபாலனம் செய்துவந்தார். 1999இல் வினாயகமூர்த்தி அவர்கள் இறைபதமடைந்தார்கள்.
அதன்பிற்பாடு தம்பிலுவிலைச்சேர்ந்த அதிபர் வ.ஜெயந்தன் அவர்களைத்தலைவராகக்கொண்டு பரிபாலனசபையொன்று அமைக்கப்பட்டு இயங்கிவந்தது. இவரது காலத்தில் அதாவது 2012களில் தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கிழக்கிலங்கையின் இந்துகுருமார்சங்கத்தலைவரான சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் (தற்போதைய ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் மாமனார்) அவர்களைத்தொடர்புகொண்டு பூப்போட்டுப்பார்த்து புதிய ஆலயம் தற்போதைய இடத்தில் கட்டுவதற்கு கால்கோள் இடப்பட்டது.
அதன்படி 2013இல் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடும்விழா இடம்பெற்றது. சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் முதலாவது அடிக்கல்லை நட்டு ஆரம்பித்துவைத்தார். கருவறைக்குரிய அடித்தளம் இடப்பட்டது. அத்தோடு நிருமாணப்பணி பல்வேறு காலநேர வர்த்தமான சூழலால் ஸ்தம்பிதமானது.இடைக்காலத்தில் பாண்டிருப்பைச்சேர்ந்த திரு.வினோஜன் என்பார் தலைவராக இயங்கினார்.
அதன்பின்பு காரைதீவைச்சேர்ந்த திரு.கோ.கமலநாதன் தலைமையிலான பலஊர்களையும் சேர்ந்த நிருவாகசபையினர் தெரிவாகி ஆலய நிருமாணப்பணி முன்னெடுக்கப்பட்டது.அக்கரைப் பற்று ,திருக்கோவில், ஆலயடிவேம்பு ,காரைதீவு போன்ற கிராமங்களின் பரோபகாரிகளின் பெரும்பங்களிப்பினால் புதிய ஆலயம் அமைக்கப்பட்டது.இருப்பினும் அதற்கான கும்பாபிசேகம் கடந்த 6வருடகாலமாக தடைபட்டுவந்தது.
இந்நிலையில் தலைவராகவிருந்த திரு கோ.கமலநாதன் 2021.10.21 இல் இறைபதமடைந்தார். அதன்பின்பு 2021.10.24 இல் ஆலயத்தில்கூடிய நிருவாகசபையினர் உபதலைவராகவிருந்த காரைதீவைச்சேர்ந்த சமுகசேவையாளரான தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களை அக்கூட்டத்தில் சமுகமளித்திருந்த ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா முன்னிலையில் தலைவராகத்தெரிவுசெய்தது.
கும்பாபிஷேகம் காணவுள்ள இவ்வாலயத்திற்கு பரோபகாரிகள்அம்மன் பக்தர்கள் மேலும் உதவவேண்டும் என புதிய நிருவாகசபையினர் வேண்டுகோள்விடுத்ததன் பலனாக பல ஊர்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பலவிதமான உதவிகள் கிடைக்கப்பெற்றன. அதனைக்கொண்டு ஆலயத்தில் இதுவரைகாறும் இல்லாத குழாய் குடிநீர் விநியோகம் அன்னதான மண்டபம் கழிவறைத்தொகுதி எனப் பல வேலைத்திட்டங்களை சொர்ணம் விஸ்வநாதன் ஆர்க்கிரெக்ட் மகேந்திரன் டாக்டர் அ.வரதராசா அவுஸ்திரேலியா பாலன் சரவணாஸ் லதன் காரைதீவு சுகுமார் உள்ளிட்ட பல பரோபகாரிகளின் உதவியால் முன்னெடுத்து வருகிறது புதிய நிருவாகசபை. ஆலய முகப்பையும் அழகான கோபுரஅமைப்புடன் புனரமைத்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours