உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை பிரான்ஸ் கிளை ஏற்பாட்டில் திரு கந்தையா சிங்கம் அவர்களின் ‘நடந்து வந்த பாதையிலே’ என்னும் நூல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உள்ள சறோன் தமிழர் பாடசாலையில் வெளிட்டு விழா நடைபெற்றது.

தொழிலாளர் நாளாகிய (01.05.2022) இந்நாளில் பல போக்குவரத்து தடைகள் சிரமங்கள் ஏற்பட்டபோதிலும் ‘எத்தடை வரினும் தமிழோடும் விளையாட்டோடும் இணைந்திருப்போம் என்னும் உயரிய மந்திரத்தை மனதில் கொண்டவர்களாக அனைத்து ஆர்வலர்களும் ஒன்று கூடியமை வியந்து பாராட்டக் கூடியதாக அமைந்திருந்தது.

ஒரு மணி நேர தாமதத்துடன் ஆரம்பித்த நிகழ்வு மிகவும் விறுவிறுப்பாகவும் சோர்வின்றி அழகான திட்டமிடலுடன் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி உயர்வுக்கு பாடுபட்டு மறைந்த அமரர்கள் திரு.பாலசிங்கம் (பாலா அண்ணா பிரான்ஸ்) மற்றும் திரு நிர்மலன் (நிம்மி பிரித்தானியா) ஆகியோருக்கும் சிறப்பாக அக வணக்கம் நடைபெற்றது. இன் நிகழ்வு அவர்கள் பணிக்கு கிடைத்த உயர்வான மதிப்பாக கருதமுடிந்தது.

வன்னி மண்ணின் மைந்தன் தந்தை என போற்றப்படும் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் எழுதிய தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

வரவேற்பு உரையினை திரு.சுரேந்திரகுமார் (சுரேன்) அவர்கள் வழங்க உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் தலைவர் திரு’ சிவசிறி தங்கராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக ‘நடந்து வந்த பாதையிலே’ நூல் வெளியீடானது ஐந்தாவது தடவையாக நடந்தேறியது. திரு.சிவசிறி அவர்களின் உரையில் திரு.கந்தையா சிங்கம் அவர்களின் சிறப்பான செயட்பாடைப் பாராட்டி உரையாற்றி இருந்தார்.

தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திரு.வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் உரையாற்றுகையில் தமிழர் வரலாறு மீட்டெடுக்கப்பட்டு இளம் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்த வேண்டும். என்றும் அதற்கு இவ்வாறான நூல்கள் உதவும் என்பதை குறிப்பிட்டு நூலாசிரியரின் சிறப்பினையும் சுட்டிக்காட்டி நின்றார்.

சிறப்புரையாற்றிய திரு.விஜயகுமார் அவர்கள் விளையாட்டின் மூலம் உலகத்தமிழர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியானது தலைவரின் சிந்தனையே என்பதனையும் குறிப்பிட்டு அமைதிகாலத்தில் நூலாசிரியரை தாயகத்தில் சந்தித்தமையையும் நினைவு கூர்ந்திருந்தார்.

இளந் தலைமுறையினர் திரு.கபீர் முகமது திரு, அச்சுதன் மகேந்திரராஜா, திரு.தமிழ்ச்செல்வன் பாலசிங்கம் ஆகியோர் தமது ஆணித்தரமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள். அமைதியாகவும் உண்மையான நேரிய பாதையில் செல்லும் முறை அவர்களை ஈர்த்தது என்றும், நூலாசிரியரைப் பாராட்டி அவர்களது உரை அமைந்திருந்தது.

பிரான்ஸ் நாட்டின் சர்வதேச அப்பன் கராத்தே நிறுவனர் திரு.அப்பன் அவர்கள் நூலாசிரியருக்கு வாழ்த்து மடல் வழங்கி மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீட்டினை திரு.வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் வெளியீடு செய்ய திரு. விஜயகுமார், திரு.பாஸ்கரன், திரு.பாலசிங்கம் தமிழ்ச்செல்வன் முதலானோர் பெற்றுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து திரு.தங்கராஜா சிவசிறி, திரு.விஜயகுமார் அவர்கள் நூலினை தொடர்ந்து வழங்கி சிறப்பித்தார்கள்.

நூலாய்வு செய்த ஊடகவியலாளரும் ,ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. இராமலிங்கம் தில்லைநாயகம் மிகவும் நுட்பமாகவும் திடமாகவும் நூலினை வாசித்து ஆய்வு செய்தமை காணமுடிந்தது. அவரது பார்வையில் எழுந்த சில வினாக்களுக்கு விடை கேட்பதாகவும் பலவற்றை பாராட்டியும் அவரது உரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுரைகளையும் நூல் வெளியீட்டு விழாவையும் மதிப்புடன் ஏற்று நூலாசிரியர் கந்தையா சிங்கம் அவர்கள் உரையாற்றுகையில் நூலாக்கத்தில் ஏற்பட்ட சிரமங்களையும் இடர்களையும் சுட்டிக்காட்டியதுடன் நூலுருவாக்கத்தில் உதவியவர்களுக்கு நன்றி என்னும் உயர்ந்த பண்பை வெளிப்படுத்தி நின்றது போற்றுதற்குரியது.

திரு.சிவசிறி அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி நூலாசிரியர் திரு.கந்தையா சிங்கம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திரு.குணசிங்கம் மோகன்ராஜன் அவர்கள் இந்த நிகழ்வை மிகவும் அழகாக நெறிப்படுத்திய பங்கு சிறப்பாக அமைந்திருந்தது.

‘நடந்து வந்த பாதையிலே’ நிகழ்வில் கவிஞரும் ஆசிரியருமான திருமதி ரதி கமலநாதன் அவர்களின் நன்றி உரையுடன் இரவு விருந்தோம்பலுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours