அன்று 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி திராய்க்கேணி எனும் தமிழ் கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது.

 கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்க்கேணி கிராமமாகும். அங்கு 286 குடும்பங்கள் சீரும் சிறப்புமாக நிம்மதியாக வாழ்ந்து வந்தன.

 ஆனால்,1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அந்த நிம்மதிக்கும் ,வாழ்க்கைக்கும் இனவாதிகளால் வேட்டு வைக்கப்பட்டது.
ஆம் ,அங்கு நான்கு கவச வாகனங்களில் வந்தவர்கள் கிராம மக்களை ஆலயத்திற்கு வரவழைத்து ஏதுமறியாத 54 பேரை மிகவும் குருரமாக  ஈவிரக்கமின்றி கத்தியாலும், கோடரியாலும் வெட்டி கொலை செய்தார்கள்.

 தமது கண்களின் முன்னால் தமது உதிர உறவுகள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததை கண்டவர்கள் மறுகணமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காரைதீவு, விநாயகபுரம் ,கிரான்குளம், மட்டக்களப்பு என்று புலம்பெயர்ந்தார்கள்.

 பலர் துன்ப வேதனைகளோடு காரைதீவில் இருந்த விபுலானந்த மகா வித்தியாலய அகதி முகாமில் தஞ்சம் அடைந்தார்கள்.

  பின்னர் 04 ஆண்டுகளுக்கு பிறகு 1994 ஆம் ஆண்டு  மீண்டும் சொந்த ஊரான திராய்க்கேணியில் குடியமர்த்தப்பட்டார்கள். 
ஆனால், ஆக 121 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறின. ஏனையவர்கள் திரும்பவில்லை.

1990 காலப்பகுதியிலே தலைவராக இருந்து பின்பு படுகொலை செய்யப்பட்ட  மயிலிப் போடி என்பார் அப்போது சர்வதேச, உள்நாட்டு  ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றோம்.

 அன்று 1990 ஆகஸ்ட் மாதம்ஆறாம் தேதி காலை 7 மணி அளவில் அக்கரைப்பற்று பக்கத்தில் இருந்து சுமார் இருநூறு முஸ்லிம் இனவாதிகளும் ,சீருடை தரித்த துப்பாக்கி ஏந்திய படையினரும் கவச வாகனத்தில் வந்தார்கள்.
 .அவர்கள் வீடு வீடாகச் வந்து பிள்ளையார் ஆலயத்திற்கும், மாரியம்மன் ஆலயத்திற்கும் வந்து சேருமாறு கட்டளை இட்டார்கள்.

 அந்த கால பகுதி பொதுவாக சுற்றி வளைப்பு இடம்பெறுகின்ற காலப்பகுதி. அதனால்  சுற்றி வளைக்கின்றார்கள் என்ற சிந்தனையில் சென்றோம்.

 ஒரு மணி நேரத்திலே
மீண்டும் வந்து அவர்கள் அனைவரையும் மாரியம்மன் கோவில் செல்லுமாறு பணித்தார்கள்.
 அனைவரும் வந்து சேர்ந்த பொழுது தான் அந்த வரலாறு காணாத துர்ப்பாக்கிய  குரூர கோர சம்பவம் இடம்பெற்றது.

 திடீரென்று ஒருவர் கிரீஸ் கத்தியால் ஒருவரை குத்தினார். மற்றவர்கள் கொண்டு வந்த கோடரியாலும், கத்தியாலும் மளமளவென வெட்டி  சாய்த்தார்கள். இரத்தம் குபீர் குபீர் என பாய்ந்தது.

 52 பேர் அந்த இடத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததை அனைவரும் கையறு நிலையில் அழுதழுது கண்டோம்.

கர்ப்பிணி ,ஆண் ,பெண், குழந்தை என்று பார்க்காமல் அனைவரையும் வெட்டி தள்ளினார்கள்.

 வந்தவர்கள் தமிழிலே பேசினார்கள், ஏசினார்கள். பெண்களை கண்முன்னே கற்பழித்துக் கொலை செய்தார்கள். இந்த குருச்சேத்திரம்  இரண்டு மணி நேரம் இடம்பெற்றது .மக்கள் மரண ஓலம், அவல குரல் எழுப்பினார்கள். எதுவுமே அவர்கள் காதில் கேட்கவில்லை .

மூன்று மணி நேரம் கழித்து காரைதீவில் இருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரும், இராணுவத்தினரும் வந்து எஞ்சிய எங்களை காப்பாற்றினார்கள்.
நாங்கள் படுகொலை செய்யப்பட்ட 32பேரைஅழுதழுது ஒரே குழியில் புதைத்தோம்.ஏனையோரை தனித்தனியாக புதைத்தோம்.

 எங்களை அவர்கள் காரைதீவிற்கு கொண்டு சென்றார்கள். காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். அங்கும் இரண்டு பேர் மரணித்தார்கள் .

இந்த சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது மாத்திரமல்லாமல் மாறாத வடுக்களையும் ,மிகுந்த பயபீதியையும் ஏற்படுத்தியது. என்றார்.

பின்னர் ,1994 ஆம் ஆண்டிலே 121 குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்ட ன.

அதற்குள் ,அங்கிருந்து 4 ஏக்கர் அரசகாணியை போலீஸ் அதிகாரி ஒருவர் ( இன்று உயிருடன் இல்லை) அடாத்தாக பிடித்து தென்னம்பிள்ளை வைத்தார் .அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் கிராம தலைவர் மயிலிப்போடி. நீதிமன்றத்தில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரும் என்று உணர்ந்த அந்த கும்பல்  1997களில் மயிலிப்போடியை படுகொலை செய்தார்கள்.

 இவ்வாறு, இரத்தக் களரி கண்ட திராய்க்கேணி மக்கள்  32 வருடங்களுக்கு முன்பு அனுபவித்த அழியாத வரலாற்று வடுக்களை இன்று 32 வது வருடமாக நெஞ்சில் சுமந்து கொண்டு நினைவு கூருகின்றார்கள். இன்று அங்கு 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதாக.

வி.ரி.சகாதேவராஜா
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours