(சுமன்)



மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு தனிப்பட்ட திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறான உறுதியளிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் நான் ஜனாதிபதி அவர்களை நட்பு ரீதியாகச் சந்தித்தேன்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக கிழக்கு பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கனகசிங்கம் மற்றும் பதிவாளர் பகிரதன் ஆகியோரும் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்வதற்காக என்னால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது உபவேந்தரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்குப் பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பிக்கவும், இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடத்தை விரைவாக அமைந்து கொடுக்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமாணியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு போன்றன மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி என்னால் விடுக்கப்பட்டது. இதற்கு என்னால் குறித்துரைக்கப்பட்ட விடயங்களுக்கு ஏற்றவாறே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours