நூருல் ஹுதா உமர்


கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான நியமனம் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் நோக்கில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும், கிழக்கு மாகாண கல்வி மேம்பாடு தொடர்பிலும் ஆளுனருடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை கிழக்கிலையே பணிக்கமர்த்த நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். இது விடயமாக கல்வி அமைச்சரிடம் தான் எடுத்துரைத்து உள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது உறுதியளித்தார். அன்றைய தினம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி. எஸ். ரத்நாயக்க அவர்களையும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி. திஸாநாயக்க அவர்களையும் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இது தொடர்பில் அவர்களிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை கிழக்கிலேயே நியமிப்பது தொடர்பான உயர்மட்ட கூட்டமொன்று நாளை (05) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சர் எந்திரி இஸட்.ஏ. நஸீர் அஹமட் உள்ளடங்கலாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடம்பெறவுள்ள அநீதி தொடர்பில், கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பிலும், கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அழுத்தமாக கோரிக்கை முன் வைக்க உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours