( வி.ரி. சகாதேவராஜா)

33வருடங்களாக காடுமண்டி மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த பொத்துவில் கனகர் கிராம மக்களது காணிகள் எதிர்வரும் 40 தினங்களுள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  (11) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கனகர் கிராமத்தில் வைத்து தெரிவித்தார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை சர்ச்சைக்குரிய கனகர் கிராமத்திற்கும் விஜயம் செய்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள்  உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் பொத்துவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள்அங்கு சமுகமளித்திருந்தனர்.

கடந்த இரு மாதங்களாக இப் பிரதேசம்  ஜேசிபி இயந்திரம் மூலம் துப்பரவாக்கப்பட்டு வருகிறது.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் அரச அனுமதியுடன் இப் பணியில் ஈடுபட்டு வந்தார்

அங்கு உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் கூறுகையில்..
இங்கு வாழ்ந்து வந்த மக்கள் 1985 க்கு பின்னர் யுத்தத்தில் இடம்பெயர்ந்தனர்.

வாழ்ந்த 226 பேரில் முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு 1 ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக 1 ஏக்கர் காணியும் வீடு அமைக்க 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது.
எம்மைப் பொறுத்தவரை அனைவருக்கும் இக் காணிகள் பகிரந்தளிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்த இடத்திலேயே உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை எடுத்து இன்னும் நாற்பது நாட்களில் இக் காணிகள் பூரணமாக துப்பரவாக்கப்பட்டு உரிய சகல மக்களுக்கும் பகிர்ந்தளிக்க பட வேண்டும் என்று கட்டளை இட்டார்.

கூடியிருந்த மக்கள் சந்தோசத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours