(எம்.ஏ.றமீஸ்)
அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இருந்து முற்றாக நீக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக அறுகம்பே அபிவிருத்தி போரத்தினால் சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி இடம்பெறவுள்ளது என போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.
இது தொடர்பிலான அறிமுக நிகழ்வும்; ஊடகவியலாளர் மாநாடும் நேற்றுமுன்தினம்(10) மாலை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உல்லாசப் பயணிகளின் கேந்திர நிலையமாக உள்ள அறுகம்பே பிரதேசத்தில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் போன்றவற்றின் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன்மூலமாக பல்வேறான பாதிப்புக்களை நாம் எதிர் நோக்கி வருகின்றோம். கடல் வளம் சுற்றுப் புறச் சூழல் போன்றன இதனால் பாதிக்கப்படுகின்றன. இவற்றைக் கட்டுப் படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
சர்வதேச அளவில் எமது அமைப்பு அரை மரதன் ஓட்டப் போட்டியினை ஒழுங்கு செய்து இதன் மூலம் கிடைக்கப் பெறும் நிதியினைக் கொண்டு பொத்துவில் பிரNதுசத்தில் கல்வித் துறையினை அபிவிருத்தி செய்வதோடு, பிளாஸ்ரிக் பாவனையற்ற பொத்துவில் பிரதேசத்தினை கட்டியெழுப்வதே எமது பிரதான நோக்மாக உள்ளது.
உலகரங்கில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளைப் போன்று அறுகம்பே அரை மரதன் போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், அறுகம்பே அபிவிருத்தி போரம் நான்காவது தடவையாகவும் இம்மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனை மேலும் சிறப்பாக நடாத்துவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எமது அமைப்புடன் கைகோர்த்துள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் கொரேனா அனர்த்தத்தினால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமைகள் மாற்றமடைந்து தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறுகம்பை பிரதேசத்தை நோக்கி அதிகரித்து காணப்படுகிறது. இக்காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இம்மரதன் போட்டியினை சர்வதேச தரத்தில் நடாத்துவதற்குரிய சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டி நிகழ்ச்சியில் உள்நாட்டு. வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளதுடன், எமது பிரதேச மரதன் ஓட்ட வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த  போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்,  சான்றுதழ்களும் வழங்கவுள்ளோம்.
இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன், பொத்துவில் அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி இம்மாதம் 23ஆம் திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்களை 0767016888 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவத்தின் 242வது படையணியின் சிவில் விவகார அதிகாரி கேணல் பிரசன்ன டீ சில்வா, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹிம், அறுகம்பே விசேட அதிரடிப் படை முகாம் தலைமை பரிசோதகர் டீ.எம்.ஆர்.செனவிரத்ன, பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ஏ.ஆர்.திசாநாயக்க, அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் ஆலோசகரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours