( வி.ரி.சகாதேவராஜா)
எதிர்வரும்
செப்டம்பர் மாதத்திலிருந்து நாடு வங்குரோத்து அடையும் என்று எதிராளிகள்
சொல்கிறார்கள். ஆனால் செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் நாடு பாரிய
அபிவிருத்தியை காணவிருக்கின்றது. ஜனாதிபதியை நாங்கள் பூரணமாக
நம்புகின்றோம்.
இவ்வாறு
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் இன்று(28)
வெள்ளிக்கிழமை காரைதீவில் இடம் பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
காரைதீவு
பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்
இன்று(28) வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைதீவு
பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில்,
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், உதவி பிரதேச
செயலாளர் பி. பார்த்தீபன், கணக்காளர் ஜனாபா தெஸ்மியா, உதவித் திட்டமிடல்
பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன் , திணைக்களங்களின்
பிரதிநிதிகள்,முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலகத்தின்
உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட
அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் பேசுகையில் .
எதிர்த்தரப்பினர்
கடந்த நாலாம் மாசம் பட்டினிச்சாவு வரும் என்றார்கள். இப்பொழுது
செப்டம்பரில் நாடு வங்குரோத்து அடையும் என்கிறார்கள். இவற்றையெல்லாம்
எதிர்கொண்டு எமது ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டை பொருளாதார ரீதியில்
கட்டியெழுப்பி வருகின்றார். அவர் ஒரு செயல் வீரன் .
அடுத்த
நான்கு வருட காலத்திற்கு நாட்டுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும்
கிடைத்திருக்கின்றது. கூடவே 3.5 பில்லியன் டாலர் கிடைக்க இருக்கின்றது .
எனவே
நாட்டு மக்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. செப்டம்பர் மாதத்தில் இருந்து
அபிவிருத்தி சார் செயற்பாடுகளை நாங்கள் சாதாரணமாக மேற்கொள்ள முடியும். 2024
க்குரிய பட்ஜெட் மிகவும் சிறப்பாக அமைய இருக்கின்றது.
என்றார்.
காரைதீவு பிரதேச அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் கலந்துரையாடி உடனுக்குடன் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours