"நீர் இன்றி அமையாது இவ்வுலகு" என்று கூறுகின்றார் தெய்வப்புலவர் வள்ளுவர். 
ஆனால் இந்த நவீன யுகத்தில் நீர் இல்லாமல் ஒரு முழுக்கிராமமே தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என்றால் நம்ப முடியுமா? 

ஆம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற  முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது அந்த கிராமம்.

 கல்லரிப்பு என்பது அக் கிராமத்தின் பெயர். அந்த கிராமத்தில் ஆக 41 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் கடந்த காலங்களிலே தமது குடிநீர் மற்றும் தேவைகளுக்காக  ஆற்றிலும் ஓடையிலும் தங்கியிருந்தார்கள்.

அந்த மக்களிடம் குடிநீர் பிரச்சினை பற்றி கேட்ட போது அவர்கள் கூறியதாவது...

 சுத்தமான நீர் எடுக்க வேண்டுமாக இருந்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து அதனை பெற வேண்டிய தேவையுள்ளது.

நாளடைவில் பிரதேச சபையூடாக  குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது . அதுவும் சில நேரங்களில தாமதமாகிதான் கிடைக்கும்.
அவ் வேளைகளில் ஆற்றில் இருந்து நீரை பெறுவோம். எமது ஊரில் பாடசாலை இல்லை.
 மாணவர்கள் சீருடைகளை இங்கு கழுவினால் பழுப்பு நிறத்தில் காணப்படும். அருகிலுள்ள பாடசாலைக்கு செல்லும் எமது மாணவர்களுக்கு அது சிரமம். ஆசிரியர்கள் சிலவேளைகளில் இந்த நிறம் பற்றி கேள்விகள் கேட்பதுண்டு.

இந் நிலையில் இங்கு ஒரு குடிநீர் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வெளிநாட்டு உதவியோடு அரச சார்பற்ற நிறுவனமொன்று முன்வந்தது.

Bright future international  UK என்ற நிறுவனம் தான் இத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கியது.
இந்த குடிநீர் திட்டம் 31_3_2023 ல் ஆரம்பிக்கப்பட்டது.  

 ஆற்றில் இருந்து நீரை பெற்று சுத்திகரிப்புச் செய்து அதனை வழங்குவதற்காக மின்சார செலவுக்காக மாதம் 100 ரூபாய் வழங்குமாறு மக்களிடம் கோரப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியில் அந்த நூறு ரூபாய் வழங்கினார்கள்.

 ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே ஒரு மாதம் வரைதான் நீடித்தது.

ஒருமாதமே குடிநீர் கிடைத்தது. அதுவும் எதிர்பார்த்த சுத்தமான நீர் இல்லை.

அதனக்கூட  ஏப்ரல் மாதம் மாத்திரமே அதனை வழங்கியிருந்தார்கள். அதன் பின்பு குடிநீர் வழங்கப்படவில்லை.

தற்போது இக் குடிநீர்த் திட்டமும் நிறுத்தப் பட்டு விட்டது. தற்போது நாங்கள் குடிநீருக்காக  வெகு தூரம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. 

இந் நிலையில் மக்கள் வெகுண்டெழுந்து அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவிய ஒப்பந்தக்காரரிடம் கேட்ட பொழுது அதற்குரிய இரசாயன திரவம் ஒன்று வரும். அது வருகின்ற பொழுது குடிநீர் தருவோம் என்று கையை விரித்து விட்டார்.
அதனால் குடிநீருக்காக அல்லாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. என்றார்.

தற்பொழுது அந்த மக்கள் குடிநீருக்காக மீண்டும் மீண்டும் தொலைதூரம் பயணிக்க வேண்டி இருக்கின்றது .

இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று அந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

கவனிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours