(வி.ரி.சகாதேவராஜா)
கடந்த 33 வருடங்களுக்கு முன்பு ஏதுமறியாத 54 அப்பாவித் தமிழ் மக்கள் குரூரமாக கொலை செய்யப்பட்டமையை உலகறியும்.எனினும்  இதுவரை அப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. சர்வதேசம் தலையிட்டு நீதி கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு திராய்க்கேணி படுகொலையின் 33ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம்(6) ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம் பெற்ற போது  கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  கோரிக்கை விடுத்தார்.

திராய்க்கேணி படுகொலையின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம்(6) ஞாயிற்றுக்கிழமை மாலை சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காத்தவராயன்( காந்தன்) தலைமையில் திராய்க்கேணி சித்திவிநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேலும் பேசுகையில்..


திராய்க்கேணி தமிழ் மக்கள் இன்னும் பல சவால்களுக்கும் நெருங்குவாரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 33 வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட உலகறிந்த அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்க வில்லை. நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம் .ஆனால் இன்னும் நில ஆக்கிரமிப்பும் அவர்களது இருப்பை இல்லாமல் செய்யும் வேலைகளும் தொடர்கின்றன .

தமிழ் மக்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று எமது தலைவர் கூறியது போன்று அந்த துர்பாக்கிய நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் .

தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கோ எதுவுமே செய்யாமல் நீதியை வழங்காமல்  புறக்கணித்து வந்திருக்கின்றன.
 அதனால் அவர்கள் இன்றும் பலமின்றி ஏதோ வாழ்ந்து வருகிறார்கள் .
எனவே இந்த இனப்படுகொலைக்கு நீதியான விசாரணை வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் .

இங்கு இடம் பெற்ற குரூரமான இப்படியான படுகொலைகள் இனியும் நடந்து விடக்கூடாது 

ஏதோ பூர்வீக நிலத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த மக்கள் இன்று நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறார்கள். எது வந்தாலும் என்ன சவால்கள் இருந்தாலும் நாங்கள் இந்த நினைவு கூரலை தொடர்ச்சியாக நடத்துவோம் . என்றார்.

 அங்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

33 வருடங்களுக்கு முன்பு காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவுகள் கதறியழுது கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours