( வி.ரி. சகாதேவராஜா)


கடந்த 33 வருடங்களுக்கு முன்பு ஏதுமறியாத நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஆலயத்தினுள் வைத்து  வெட்டியும் கொத்தியும் கொடூரமாக குரூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இதுவரை அப்படுகொலைக்கு நீதியான விசாரணையோ எந்த நிவாரணமோ கிடைக்கவில்லை.

இவ்வாறு வீரமுனைப் படுகொலையின் 33ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு நேற்று (12) சனிக்கிழமை  இடம் பெற்ற போது  கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  கோரிக்கை விடுத்தார்.

வீரமுனை படுகொலையின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வீரமுனை ஆலயநிருவாகத்தின் ஏற்பாட்டில் வீரமுனை படுகொலை நினைவுத் தூபி முன்றலில் அஞ்சலி இடம் பெற்று பின்னர் ஆலய வளாகத்தில் பொது நினைவேந்தல் நடைபெற்றது.

அங்கு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மேலும் பேசுகையில்..

சம்மாந்துறை  வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 ஜுன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று ஆலயத்தினுள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் கொன்றனர்.                           

இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல அப்பாவிப்பொதுமக்கள் அடங்குவர்!
இன்று 33, ஆண்டுகள் கடந்தும் கொலையாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.

நீதியும் நியாயமும் கிடைக்கவில்லை. அது கிடைக்க வேண்டும் என்றார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours