(சுமன்)
சரத்
வீரசேகர முல்லைத்தீவு நீதவானை மனநோயாளி என்று கூறுகின்றார். ஆனால்,
இலங்கையிலே, இலங்கை அரசியலிலே முற்றுமுழுதான மனநோயாளியாக இருப்பவர் சரத்
வீரசேகரவே. இவரைப் போன்றவர்கள் இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து
மாத்திரமல்ல இலங்கை அரசியலில் இருந்தும் முற்றாக ஒதுக்கப்பட வேண்டும் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை
இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை
நாடு ஒரு சுற்றுலா நாடாகவும், பல வருடங்களுக்கு முன்பு சுற்றுலா மூலமாக
பாரிய வருமானத்தை ஈட்டிய நாடாகவும் மிளர்ந்தது. ஆனால் 30, 35 வருடங்காளாக
இந்த நாட்டிலே சுற்றுலா பயணிகளின் வருகை எவ்வாறு இருந்தது என்பது பற்றி
அனைவரும் அறிந்ததே.
சரத் வீரசேகர அவர்கள் உரையாற்றும் போது
கூறியிருந்தார் சிங்களவர்கள் ஒருபோதும் முதுகில் குத்தமாட்டார்கள் என்று.
இந்த நாட்டில் தமிழர்கள் என்றுமே நன்றிக்கடன் மறந்தவர்கள் அல்ல என்ற
விடயத்தை நான் அவருக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
இந்த நாடு
சுதந்திரம் அடையும் போது தமிழர்களது தேவை தேவைப்பட்டது. இந்தியா சுதந்திரம்
அடைந்ததன் பின்னர் இலங்கை சுதந்திரம் அடைவதற்காக சேர்.பொன்.இராமநாதன்,
சேர்.பொன்.அருணாசலம் போன்றவர்கள் பிரித்தானியா சென்று இந்த நாட்டிற்கு
சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த வரலாறுகளை அனைவரும் அறிந்து கொள்வது
மாத்தரமல்லாமல். யார் நன்றி மறந்து செயற்பட்டார்கள், யார் முதுகில்
குத்தினார்கள் என்பதை அறிந்து கொள்வதுடன், இந்த நாட்டின் சுற்றுலாத்
துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட
இனக்கலவரங்கள், இன முறுகல்களே என்பதையும் அனைவரும் ஏற்றே ஆக வேண்டும்.
இந்த
நாடு சுந்திரம் அடைந்ததிலிருந்து தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.
சுதந்திரம் பெறவதற்காகத் தமிழர்கள் தேவைப்பாட்டார்கள். ஆனால் 1956ம் ஆண்டு
சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து இந்த நாட்டைக் கலவர பூமியாக
மாற்றியது சிங்கள அரச தலைவர்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 1957ல்
தந்தை செல்வா மற்றும் பண்டா இணைந்து இந்த நாட்டில் தமிழர்கள் சம பிரஜைகள்,
அவர்கள் சம உரிமையுடன் வாழும் ஒப்பந்தத்தைச் செய்த போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன
தலைமையில் புத்த பிக்குகள் கண்டி யாத்திரை செய்தார்கள்.
அது
மாத்திரமல்ல 1958, 1978, 1983 ஆம் ஆண்டுகளாக இருக்கலாம் இந்த நாட்டிலே
தமிழர்களை இன ரீதியாக அடக்கி அவர்களது பெருளாதாரத்தை அழித்து
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டு இந்த நாட்டிலே அவர்களை
அகதிகளாக ஆக்கிய பெருமை பெரும்பான்மை இனத்தவர்களையே சாரும் என்பதையும்
மறந்துவிடக் கூடாது.
தமிழர்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தையோ, ஆயுதக்
கலாசாரத்தையோ விரும்பியிருந்தவர்கள் அல்ல. அரசியல், ஜனநாயக ரீதியில் இந்த
நாட்டிலே தாங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று அகிம்சை ரீதியான
போராட்டங்களைத் தான் செய்தார்கள். ஒப்பந்தங்கள் ஊடாகவே அவற்றை தீர்க்க
முற்பட்டார்கள். ஆனால் பெரும்பான்மையினத் தலைவர்கள் எமது தமிழ்த் தலைவர்களை
ஏமாற்றியது மாத்தரமல்லாமல், அகிம்சை ரீதியாகப் போராடிய எமது தலைவர்களின்
தலைகளை உடைத்ததன் காரணமாகத் தான் எமது இளைஞர்கள் வலிந்து ஆயுதப்
போராட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
இன்றும்
என்ன செய்கின்றீர்கள் 2009ல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்
வேறு ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நாட்டை பௌத்த நாடு என்று சொல்ல
முற்படுகின்றீர்கள். வடக்கு கிழக்கிலே அத்துமீறிய பௌத்த மயமாக்கலைச் செய்து
கொண்டிருக்கின்றீர்கள். தெற்கிலே இருந்து இனவாதிகளான நீங்கள் வடக்கு
கிழக்கிற்குச் சென்று புதிது புதிதாக விகாரைகளை அமைக்கின்றீர்கள், இந்து மத
ஆலயங்களை அழிக்கின்றீர்கள்.
வடக்கு கிழக்கு மாகாண பிரதம நாயக்க
வணக்கத்துக்குரிய விமலசார நாயக்க தேரர் என்ன கூறுகின்றார். குருந்தூர்
மலையில் சிங்கள பௌத்தர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. ஆனால்
பௌத்தம் இருந்திருக்கின்றது. அங்கு தமிழ் பௌத்தர்களே இருந்தார்கள் என்று,
அவர் அவ்வாறு கூறும் போது தெற்கில் இருந்து நீங்கள் கூறுகின்றீர்கள் அங்கு
சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் சிங்கள பௌத்தம் இருந்ததென்று. அவர் எமது
போராட்ட கால கன்னியத்தைப் பற்றியும் சொல்லியிருக்கின்றார்.
போராட்ட
காலத்திலே வடக்கு கிழக்கில் விகாரைகள் எதுவும் தாக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்திலே நாகவிகாரை இருந்தது இன்னும் பல விகாரைகள் இருந்தன. எந்த
விகாரைகளும் தாக்கப்படவில்லை. ஆனால் அக்காலத்தில் இராணுவத்தினராலும்,
பாதுகாப்புப் படையினராலும் இந்து ஆலயங்கள் பல தாக்கப்பட்டன, கிறிஸ்தவ
தேவாலயங்கள் அழிக்கப்பட்டன ஆயிரக்கணக்கான மக்கள் அந்த ஆலயங்களிலே
கொல்லப்பட்டார்கள்.
இன்று தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில்
வடக்கு கிழக்கில் மாத்திரம் தொல்பொருளைத் தேடாமல் பௌத்தத்தை
உருவாக்குகின்றீர்கள். அங்கு பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதற்கு
சான்றுகளைத் தேடித் தேடி உருவாக்குகின்றீர்கள். எங்கெங்கெல்லாம் உயர்ந்த
மலைகள் இருக்கின்றதோ, அங்கங்கெல்லாம் புத்தர் சிலைகளை நிறுவுகின்றீர்கள்.
ஆனால் புத்தரை வழிபடுவதற்கு அங்கு பௌத்தர்கள் யாரும் இல்லை.
இன்று
இந்த நாட்டிலே என்ன நடக்கின்றது. உதய கம்மன்பில போன்றவர்கள் தெற்கிலே
வசிக்கும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்;பினர்களின் வீடுகளை முற்றுகையிடுவதற்கு
அறைகூவல் விடுக்கின்றீர்கள். ஒரு காலத்திலே கே.எம்.பி.இராஜரெட்ண, சிறில்
மத்தியு போன்ற இனவாதிகள் இருந்தார்கள். அவர்கள் தமிழர்களுக்கு எதிராக
தங்களது நடவடிக்கைகளை நடத்தினார்கள். இந்த நாடு பற்றி எரிந்தது.
ஆனால்
இன்று அவர்கள் எல்லோரையும் உள்ளடக்கியதாக, ஒட்டுமொத்த இனவாதிகளின் உருவமாக
முன்னாள் கடற்படைத் தளபதி சரத் வீரசேகர போன்றவர்கள் இருந்துகொண்டு இந்த
நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை உருவாக்கி மீண்டும் மீண்டும் இந்த நாட்டை
அதளபாதாளத்திற்குள் தள்ளும் வரலாற்றுத் தவறைச் செய்வதற்கே
முயற்சிக்கின்றார்கள்.
இந்த நாட்டிற்கு சகலத்திற்கும் தேவைப்படுவது
அயல்நாடான இந்தியா. 1983ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து
இந்தியா இந்த நாட்டிலே நேரடியாகத் தலையிட்டது. இந்த நாட்டில் ஐக்கியத்தைக்
காப்பற்றுவதற்காக உதவி செய்தது. அண்மையில் ஏற்பட்ட கொரோணா பிரச்சனையில்
கூட சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா தான் அதிகளவில் பொருளாதார ரீதியாக
உதவி செய்தது. ஆனால் இந்த நாட்டின் அரசு என்ன செய்கின்றது. பாம்புக்கு
தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவது போன்று இந்தியாவையும் சீனாவையும்
கையாள வெளிக்கிடுகின்றது. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு
பணிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சீனாவின் உளவுக் கப்பலை எமது
கடல் பரப்பிற்குள் அனுமதித்து இந்த நாட்டுக்கு உதவிகளைச் செய்யும்
இந்தியாவை எதிரியாகவே பார்க்க முற்படுகின்றது. இந்த அரசாங்கம் இவ்வாறான
செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
எனவே இந்த நாடு மீண்டும் பற்றி
எரியாமல் சுபீட்சமாக வாழ்வதற்கு இங்கிருக்கின்ற இனவாதிகள் நிராகரிக்கப்பட
வேண்டும். இன்று இந்த சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதவானை மனநோயாளி என்று
கூறுகின்றார். நான் கூறுகின்றேன் இலங்கையிலே, இலங்கை அரசியலிலே
முற்றுமுழுதான மனநோயாளியாக இருப்பவர் இந்த சரத் வீரசேகர அவர்களே, இவரைப்
போன்றவர்கள் இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல இலங்கை அரசியலில்
இருந்தும் முற்றாக ஒதுக்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours