(எம்.ஏ.றமீஸ்)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் இம்முறை மீலாதுன் நபி தின விழாவினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வினையொட்டி கிழக்கு மாகாண மட்டத்தில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இப்போட்டி நிகழ்ச்சிகள் யாவும் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும். போட்டிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் குறிப்பிடப்படும் இடமொன்றிற்கு சமூகமளித்து நேரடியாக போட்டியில் பங்கு பற்ற வேண்டும்.
கட்டுரை கவிதை ஆகிய இரு பிரிவுகளில் திறந்த போட்டியாக இடம்பெறும் போட்டிகளுக்காக 19 வயதிற்கு மேற்பட்ட எவரும் பங்கு பற்ற முடியும். கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றுபவர்கள் 'சகவாழ்வுக்கு நபிகளாரின் வழிகாட்டல்' எனும் தலைப்பில்; 750 சொற்களுக்கு குறையாமல் கட்டுரைகளை எழுதுதல் வேண்டும்.
'அண்ணலாரின் அழகிய முன்மாதிரி' எனும் தலைப்பில் கவிதைப் போட்யில் பங்கு பற்றும் போட்டியாளர்கள் தமது கவிதை ஆக்கத்தினை எழுத முடியும். மரபுக் கவிதைகள் 40 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும்.
கிழக்கு மாகாணத்தினை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரம் இப்போட்டிகளுக்காக விண்ணப்பிக்க முடியும். இம்மாகாணத்தில் உள்ளவர்கள் இன மத வேறுபாடின்றி இப்போட்டிகளில் பங்கு கொள்ள முடியும். போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் தமது பிரதேச கலாசார உத்தியோகத்தர்களிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கலாசார உத்தியோகத்தர்களிடம் கையளிக்க வேண்டும்.
கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் பெறுபவர்க்கு 15 ஆயிரம் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். இரண்டாமிடம் பெறுபவர்க்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசு சான்றிதழ் என்பன வழங்கப்படவுள்ளதோடு, மூன்றாமிடம் பெறுபவர்க்கு ஐயாயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படும்.
கவிதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏழாயிரம், ஐயாயிரம் மற்றும் மூவாயிரம் ரூபா பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டி நிகழ்ச்சிகளில் முதலிடம் பெறும் ஆக்கங்கள் இம்முறை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளியிடப்படும் மீலாத் சிறப்பு மலரில் இணைத்துக் கொள்ளப்படும்.
கடந்த சில காலங்களாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் நடைபெறாமல் தடைப்பட்டிருந்த மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை புதிதாக பதவியேற்ற கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் மூலம் மீளவும் நடைபெறுவது மாகாண மட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் மீலாத் விழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான ஏ.எல்.தௌபீக் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours