(எம்.ஏ.றமீஸ்)


பொருளாதாரப் பின்னடைவினால் பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நம் நாட்டை துரித கதியில் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் மக்கள் அனைவரும் பேதங்கள் மறந்து ஒற்றுமைப்பட வேண்டும். இந்நிலைப்பாட்டினையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டிருக்கின்றார். அவரது தூர நோக்கு மிக்க செயற்பாட்டினாலேயே நம் நாடு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்கிறது என  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான பிரதான காரியாலயத் திறப்பு விழா மற்றும் பொத்துவில் தொகுதி ஆதரவாளர்கள் மத்தியில் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட சந்திப்பு ஆகியன நேற்று(06) மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான அமைப்பாளரும் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான யூ.கே.ஆதம்வெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
நம் நாடு பொருளாதார சீரழிவுக்குள் அகப்பட்டு வங்குரோத்து நிலைமையடைந்த போது இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை கையேற்க யாருமற்றிருந்த வேளையில், ஆட்சிப் பொறுப்பினை பாரமெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட ஒரு வருட காலத்தினுள் நம் நாட்டினை மீட்டெடுத்த பெருமையினை உலகத் தலைவர்கள் பிரஸ்தாபித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அவ்வப்போது தோல்வியினைத் தழுவிய காலப் பகுதிகளில் அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகளுக்கு முகம் கொடுத்து வந்த வேளைகளில், மீளவும் புத்தெழுச்சி பெற்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடம் ஏறும் போது ரணில் விக்ரமசிங்க வீழ்ச்சிப் பாதையில் சென்ற நம் நாட்டினை உயர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற சரித்திர உண்மையினை எவராலும் மறந்து விட முடியாது.
நாடு பிழையான வழியில் சென்று கொண்டிருந்தால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே. பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படும் செயல் வீரர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமைப் பட்டு செயற்படும் போது நம் நாட்டினை சிறப்புற முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும்.
ஜனாதிபதிக்கு வெளிநாடுகளின் உதவிகள் கிடைக்கவில்லை என எதிர்க் கட்சியினர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதாரம் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி கண்ட பல்வேறு நாடுகள்; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட  தற்போது முன்வந்துள்ளனர். இது எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
இனி வரும் காலங்களில் நம் நாட்டு மக்கள் போலியானவர்களில் பொய்ப் பிரசாரங்களுக்கு வழிப்படாமல், ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் நலன்சார் தன்மையினைப் புரிந்து கொண்டு எதிர்வரும் காலங்களில் நாம் முகம் கொடுக்கவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியினை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இக்கட்சியினை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்றார்.
இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி செயற்குழுத் தெரிவு இடம்பெற்றதுடன், நிகழ்வின் அதிதிகள் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours