(எம்.ஏ.றமீஸ்)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக சுற்றுலாத் துறையினை விருத்தி செய்யும் நோக்கில் பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதைப்பந்தாட்ட வீரர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டக் கண்காட்சிப் போட்டி நேற்று பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
பொத்துவில் ஆட்டோ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சிப் போட்டி இரவு நேர மின்னொளியில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் ஏ.முஸம்மில் தலைமையில் அறுகம்பை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியினை கண்டு களிப்பதற்காக பெருந்தொகையான வெளிநாட்டவர்களும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்.
சுற்றுலாப் பயணத்தினை மேற்கொண்டு அறுகம்பை பகுதியில் தங்கியிருக்கும் உலக நாடுகளில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்டு 'வேள்ட் இலவன்' அணியும், பொத்துவில் அறுகம்பை பகுதியில் உள்ள முன்னணி கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 'அறுகம்பை இலவன் செலக்ஷன்' அணியும் இக்கண்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டன.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியின் இறுதியின் போது அறுகம்பை இலவன் செலக்ஷன் அணி 1:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் திறமை காட்டிய வீரர்களுக்கும், கழகத்திற்கும் பெறுமதி மிக்க பரிசில்களும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது பொத்துவில் அறுகம்பை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எச்.என்.என்.பிரேமரத்ன பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக பொத்துவில் ஜம்இயதுல் உலமாக சபை தலைவர் ஏ.பி.முகைதீன் பாவா, சுற்றுலா விடுதிகள் அமைப்பின் தலைவர் கே.சிக்கந்தர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours