(ஏயெஸ் மெளலானா)


இலங்கைக்கான பிரித்தானிய தூதரகத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்கான முதலாவது செயலாளர் ஹென்றி டொனாடி, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான பைசல் காசிமை திங்கட்கிழமை (07) அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள் தொடர்பிலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளினால் இத்துறைகளில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிகள் பற்றியும் பைசல் காசிம் எம்.பி. விபரமாக எடுத்துக் கூறினார்.

பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் பயனளிப்பதாக குறிப்பிட்ட பைசல் காசிம் எம்.பி. இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை பெரும்பான்மையை கொண்டுள்ள அம்பாரை மாவட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கனிசமான மக்கள் தொகையினை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரித்தானிய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நட்புறவினை பிரதிபலிக்கும் வகையில் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மத சகிப்பின்மைக்கு தீர்வு காணுதல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய வேலைத் திட்டங்களை நாடு தழுவிய வகையில் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை தீவுக்குள் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில் பிரித்தானிய தூதரக துணை நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திருமதி மிஸ்லி நிசார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours