மதன்
சிங்களத்தின் அதியுச்ச மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்... நமக்குள் ஒற்றுமையின்மையே இதற்கெல்லாம் முதற்காரணம்...
(ஜனநாயகப் போராளிகள் கட்சி கடும் காட்டம்)
தியாக தீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியினரால் மேற்கொள்ளப்படுகின்ற நினைவு ஊர்தி பேரணியின் போது திருகோணமலையில் வைத்து இரு இடங்களில் சிங்களக் காடையர்களால் ஊர்தியின் மீதும், அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை ஜனநாயகப் போராளிகள் கட்சியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என அக்கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக பொத்துவில்லில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நினைவு ஊர்தியின் மீதும் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீதும் திருகோணமலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டிக்கும் முகமாக விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டினை பின்நோக்கிக் கொண்டு செல்லும் வகையிலேயே தாக்குதலை மேற்கொண்டவர்களின் செயற்பாடும், அவர்களை பின் இருந்து இயக்குபவர்களின் எண்ணப்பாடுமாக இருக்கின்றது.
முப்பது வருட யுத்தம் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகளை எண்ணி இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஒன்றே நாட்டில் எதிர்கால சுபீட்சத்திற்கு ஏற்ற வழி என்று பலரும் ஜனநாயக வழியில் செல்லுகையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கும் தாக்குதல் மீண்டும் இனங்களுக்கிடையிலான முறுகலை வலுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.
இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய இராணுவம், பொலிஸார் முன்னிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றமையானது. இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பு தமிழ் மக்களையும், தமிழ் பிரதிநிதிகளையும் எந்த இடத்தில் வைத்து நோக்குகின்றது என்பதை திட்டவட்டமாகப் புலப்படுத்துகின்றது.
எந்த இனமாக இருந்தாலும் தன் இனத்திற்காக போராடியவர்கள் அவர்களுக்கு உயர்ந்தவர்களே. அவர்களுக்கு அந்த இனத்தினால் கொடுக்கப்படும் மரியாதையை மற்ற இனத்தவர்கள் வஞ்சித்தல் என்பது ஜனநாயகப் பண்பு அல்ல. யுத்த வீரன் என்பவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை துட்டகைமுனுவின் வரலாற்றில் இருந்து சிங்களவர்கள் அறியாமல் இருப்பது, சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்கள் அறியாமல் இருப்பது அவர்களின் சிறுமைத் தனத்தையே காட்டுகின்றது.
கிழக்கில் தமிழ் இனம் எந்த நிலையில் இருக்கின்றதென்பதை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் காட்டியிருக்கின்றது நேற்றைய இந்த சம்பவம். இவற்றுக்கெல்லாம் நமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையே காரணம். இவ்வாறான நினைவேந்தல்கள் எல்லாம் கட்சிசார்ந்து செய்யப்படுவது அல்ல. இவை தமிழ் மக்களால் உன்னதமாக அனுஸ்டிக்கப்படுபவை.
இவ்வாறான நினைவேந்தல்களை அனைவரும் ஒருமித்து செயற்படுத்தும் போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமா? இடம்பெறத்தான் விட்டுவிடுவோமா?
அனைவரும் ஒன்றிணைந்து எத்தனையோ போராட்டங்கள் கிழக்கில் இருந்து வடக்கிற்கு சென்றுள்ளன. இதன்போதெல்லாம் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லையே ஏன்? நாம் ஒற்றுமைப்பட்டு நின்றமையால் எம்மைச் சீண்ட சிங்களம் பயப்பட்டது. தனித்து தனித்து கட்சி இலாபம் கருதி இவ்வாறான நிகழ்வுகளைச் செய்யும் போது இவ்வாறானவர்களும் இது வாய்ப்பாக இருக்கின்றது.
நேற்றைய பாடமானது நம் ஒற்றுமைக்கு விட்டிருக்கும் சவாலாகும். இதிலிருந்து நாம் படிப்பினையைக் கற்றுக் கொள்ளாமல் இருந்தோமானால் இன்று கிழக்கில் இடம்பெற்றது நாளை இன்னொருவருக்கு வடக்கில் இடம்பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
எனவே நமக்குள் ஒற்றுமை எப்போது அவசியம், தேர்தல் காலத்தில் மாத்திரம் தங்கள் தங்கள் கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்து தமிழ் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்கள், இவ்வாறான நினைவேந்தல்கள் ஆகியவற்றை நாம் ஒற்றுமையாக ஒருமித்துச் செய்ய வேண்டும். இதன் போதுதான் இவ்வாறான சிங்களக் காடையர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
Post A Comment:
0 comments so far,add yours