(சுமன்)
சுகாதாரத் துறை என்பது மிகவும்
முக்கியமான துறை அதனூடாக அமைச்சரோ அதிகாரிகளோ பிழை விட்டு இந்த
மக்களுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்தால் விசாரணைகளை நடத்தி
அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்
செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது
இந்த நாட்டிலே க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு
தகுதி பெற்றிருக்கின்றார்கள். ஆனால் உயிரியல் துறையிலே
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ஆறுவகையாக பட்டப்படிப்பை
நிறைவு செய்கின்றார்கள்.
2008, 2009 காலப்பகுதியில் இருந்து
இற்றைவரை ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி போன்ற பட்டப்படிப்புகளை
முடித்த 1600க்கு மேற்பட்ட பட்டதாரிகள் இன்று வேலைவாய்;ப்பற்று
இருக்கின்றார்கள். அவர்களது சம்பளத் திட்டம் வைத்திய இளமாணி முடித்தவர்களது
சம்பளத் திட்டமாக இருந்தாலும், இன்று 1600க்கு மேற்பட்ட பட்டதாரிகள்
இலங்கை முழுவதிலும் வேலைவாய்ப்பற்று இருப்பதோடு கிழக்கு மாகாணத்தில்
மாத்திரம் 44 பேர் சித்த வைத்தியம் முடித்தவர்கள் இருக்கின்றார்கள்.
அதைத்தவிர ஆயுர்வேதம், யுனானி முடித்தவர்களும் இருக்கின்றார்கள். வடக்கு
கிழக்கில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இப்பட்டத்iதை முடித்தவர்கள்
சுமார் 68 பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள்.
அது
மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்தில் 68 ஆயுர்வேத சித்த, யுனானி வைத்தியசாலைகள்
இருக்கின்றன. அதில் கூடுதலான வெற்றிடங்களும் அந்த வைத்தியர்களுக்கு
இருக்கின்றன. இந்த சித்த, ஆயுர்வேத, யுனானி துறைகளுக்கு அடுத்த துறையாக
விளங்கும் தாதிய இளமாணி பட்டப்படிப்பினை மேற்கொள்பவர்களுக்கு அவர்கள்
படிப்பனை முடித்து வெளியில் வருகையில் தொழில் உத்தரவாதம் இருக்கின்றது.
ஆனால் மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு அந்த உத்தரவாதம் இல்லை.
இவ்வாறிருக்கையில்
தற்போதும் உயர்தரம்; முடித்த மாணவர்;கள் பல்கலைகழகத்திற்கு உள்வாங்கப்பட
இருக்கின்றார்கள். சித்த வைத்தியத்துறையில் ஐந்து வருடங்கள் அவர்கள் நிறைவு
செய்து உள்ளகப் பயிற்சிக்காக மேலும் ஒரு வருடம் என ஆறுவருடங்கள் அந்தப்
படிப்பிற்காக அவர்கள் செலவழிக்கின்றார்கள்.
அவ்வாறான பட்டாதாரிகளை
இலங்கை முழுவதிலுமாக வேலைவாய்ப்பிற்கு உள்வாங்கப்பட வெண்டிய தேவை
இருக்கின்றது. இவர்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவைப்படாது விட்டால் இந்த
மாணவர்களை இந்தத் துறைக்கு ஏன் மீண்டும் மீண்டும் உள்வாங்குகின்றீர்கள்.
இந்தத் துறையை பல்கலைக்கழகத்தில் இருந்து மூடிவிடலாம் என்பது என்னுடைய
ஆலோசனையாக இருக்கின்றது.
ஏனெனில் இந்தப் பட்டப்படிப்பை
முடித்தவர்கள் இன்று வேறு எந்தவொரு தொழிலுக்கும் போக முடியாத அளவிற்கு
மிகவும் கஸ்டமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எந்த இனத்தவராக
இருந்தாலும் இந்த சித்த, ஆயுர்வேத பட்டப்படிப்புகளை முடித்தவர்கள்
அனைவரையும் இந்த வைத்தியாலைகளுக்கு உள்வாங்க வேண்டும்.
சுதேச
வைத்தியத்திற்குரிய அமைச்சர் பேசும் போது கூறினார். எந்த விடயத்திற்கு
எடுத்தாலும் எதிர்ப்புக் காட்டுவதாக. நாங்களும் அதையே கூறுகின்றோம். இந்த
நாட்டின் இனப்பிரசசினை தீர்வுக்கு 1956ல் இருந்து மாறி மாறி வந்த
அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள்
எதிர்ப்பைக் காட்டிக் கொண்டு வந்ததன் விளைவுதான் இன்று இந்த நாடு இந்த
நிலையிலேயே இருக்கின்றது.
தற்போதும் கூட 13வது திருத்தத்தை அமுலாக்க
வேண்டும் என்று அரசாங்கமும், ஏனைய கற்றுணர்ந்த கட்சிகளும் கூறிக் கொண்டு
வரும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கென்று பலர் இருக்கின்றனர்.
இன்று இந்த 13வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்ததாதன் காரணத்தினால்
கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலே மத்திய
அரசாங்கத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளில்
தங்கியிருக்கும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. அந்த அந்த
வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவதற்கான நிதி வழங்கப்படவில்லை என்ற காரணம்
சொல்லப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த மூன்றாம் மாதம் வரை
மாத்திரமே 44 மில்லியன் நிதி கிடைத்ததாக சுகாதார சேவைகள் பிராந்தியப்
பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
அந்த அந்த மாகாணங்களுக்கு
அதிகாரங்கள் சரியாகப் பகிரப்பட்டிருந்தால் அந்த அந்த மாகாண வைத்தியசாலைகளை
அந்த அந்த மாகாணங்களே பார்த்திருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 04 ஆதார
வைத்தியாசலைகள், 19 பிரதேச வைத்தியசாலைகள் என மொத்தம் 23 வைத்தியசாலைகள்
இருக்கின்றன. இந்த வைத்தியசாலைகளில் தூர பிரதேசங்களில் இருந்து வரும்
நோயாளிகள் எத்தனையோ பேர் தங்கி வைத்திய சேவை பெறுகின்றார்கள். அரச
வைத்தியாசலைகளை நம்பி தங்கி நோய்களைத் தீர்க்க வரும் மக்களுக்கு உணவு
கிடைக்கவில்லை என்றால் அதைப் போன்றதெரு அநீதி எந்த நாட்டிலும் நடக்காது.
அத்துடன்
மட்டக்களப்பு மாவட்டத்திலே கிழக்கு மாகாணத்திற்கான ஒரே ஒரு போதனா
வைத்திசாலையிலே இன்று ஒரு மாதத்திற்கும் மேலாக சிடி ஸ்கேன்
பழுதடைந்துள்ளது. அதனைத் திருத்துவதற்கான பணமும் கோரப்பட்டுள்ளது.
மெடிகியுப்மன்ட் சேர்விஸ் எனும் கம்பனிக்கு பணம் கட்டப்பட்டும் சுகாதார
அமைச்சினால் அவர்களுக்கு கொடுப்பனவு வழங்க இருப்பதால் அதனை அவர்கள்
மாற்றுவதற்கு முன்வருகின்றார்;கள் இல்லை. இதனை சுகாதார அமைச்சர் கருத்திற்
கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கிலே தற்போது ஒரே ஒரு அஞ்சியோகிராம்
செய்யும் இயந்திரம் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இருக்கின்றது. 2021ம் ஆண்டு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அஞ்சியோகிராம் இயந்திரம் வர இருந்தது
ஆனால் அது களுத்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. நாங்கள் அப்போதிருந்த
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பிரதமருடனும், உயர் அதிகாரிகள்
எனப் பலருடனும் கலந்துரையாடினோம் ஆனால் அது கைகூடவில்லை.
தற்போது
இன்னுமொரு அஞ்சியோகிராம் இயந்திரம் சுகாதார அமைச்சிற்கு வர இருப்பதாக
அறிந்;து நான் சுகாதார அமைச்சருடனும், செயலாருடனும் பேசியிருந்தேன்.
இருவரும் மட்டக்களப்புக்கு அந்த இயந்திரத்தின் தேவையை உணர்ந்து
முக்கியத்தவம் கொடுப்பதாகக் கூறியிருக்கின்றார்கள். இருந்தாலும் சுகாதார
அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மட்டக்களப்பிலே சத்தியசாயி வைத்தியசாலையொன்று
அஞ்சியோகிராம் இயந்திரத்தை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொடுப்பதாகக்
கூறியிருந்ததாக அறிந்தேன். ஆனால் சத்தியசாயி வைத்தியசாலை இந்தியாவில்
இருந்து வைத்தியர்கள் வருகை தந்து சிறுவர்களுக்கான சத்திரசிகிச்சை
மேற்கொள்ளும் வைத்தியசாலை அங்கு இருக்கும் இயந்திரம் அந்த வைத்தியசாலையின்
தேவைக்கே. அது ஒரு தனியார் வைத்தியசாலை. அரசாங்க வைத்தியசாலையான
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இயந்திரம் வழங்குவதை உத்தரவாதம்
அளித்திருக்கின்றார். அதனை அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று நான் இந்த
சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
அடுத்த மூன்ற நாட்களில்
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வர இருக்கின்றது.
இதன் போது எனக்கு பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. இந்த
நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது ஒரு அமைச்சருக்கு எதிராகக் கொண்டு
வரப்படுகின்றது.
கொரோணா காலத்திலே தடுப்பூசிக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் மூட நம்பிக்கையிலே மண்குடத்திலே தண்ணீர் எடுத்து ஆற்றிலே கலந்த
காலகட்டங்களில் எத்தனையோ நூற்றுக்கணக்கான உயிர்களை அந்தக் கொரோணா காவு
கொண்டது. அவ்வேளையிலே அந்த அமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப்
பிரேரணை கொண்டு வரப்படவில்லை. இன்று இந்த சுகாதார அமைச்சு சர்;ச்சைக்குரிய
அமைச்சாக பல குறைபாடுகளைக் கொண்ட அமைச்சாக இருக்கின்றது.
அத்தியாவசிய
மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தரமில்லா மருத்துவ பொருள் இறக்குமதி, வைத்திய
நிபுனர்கள், அதிகாரிகள் வெளிநாடு செல்கின்றார்கள், அரச வைத்தியாலைகளில் பல
நோயாளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள், மேலும் பல நோயாளிகள்
சிகிச்சையின் போது பல பாதிப்புகளை எதிர்நோக்குகின்றார்கள், தேவையான
மருந்துகளை இறக்குமதி செய்வதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை.
இவற்றுக்கெல்லாம் இந்த அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு
வரப்பட வேண்டும்.
இந்தப் பொருளாதாரச் சூழ்நிலையிலே சுகாதாரத் துறை
மாத்திரமல்ல அனைத்துத் துறைகளில் இருந்தும் பல வகையான நிபுனர்கள் இந்த
நாட்டை விட்டு வெளிNறுகின்றார்கள். அதற்கான காரணங்களை நாங்கள் கண்டறிய
வேண்டும். உண்மையிலேயே சுகாதாரத் துறை என்பது மிகவும் முக்கியமான துறை
அதனூடாக அமைச்சரோ அதிகாரிகளோ பிழை விட்டு இந்த மக்களுக்கும் நாட்டுக்கும்
துரோகம் செய்தால் விசாரணைகளை நடத்தி அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours