மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிக்கும் நோக்கில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நடைபவனியானது மட்டக்களப்பு கல்குடா வலயத்திற்குட்பட்ட கூழாவடி கலைவாணி வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக கூழாவடி சந்திவரை சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது, இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது.
அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக குறித்த கிராம மக்களிடையே கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு "போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழித்தல்" என்பன தொடர்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் வயோதிபர்களுக்கிடையே விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடல் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவகர் பிரிவிற்குரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
குறித்த வீதி நாடகத்தினை பல்கலைக்கழக இளைஞர்கள் மற்றும் நாடக குழுவினர் திறம்பட நடித்து "போதை ஒழிப்பு" தொடர்பான பல விடயங்களை முன்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பாடசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், பாடசாலைக்கான கற்றல் கற்பித்தல் உபகரண தொகுதி வழங்கி வைக்கப்பட்டதுடன், அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் திருமதி தர்ஷினி ஸ்ரீகாந்த், மற்றும் அருவி பெண்கள் வலையமைப்பின் அலுவலக உத்தியோகத்தர்கள், பேரில்லாவெளி கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாசாலை அதிபர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours