மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலைக்கு இருதய சிகிச்சைக்கான இயந்திரம் CATH-LAB
(அஞ்சியோகிராம்) இம்முறை கட்டாயம் எமக்கு கிடைக்க வேண்டும். சென்றமுறை
சுகாதார அமைச்சராக இருந்த பவித்திரா வன்னியாரட்ச்சி எமது மக்களுக்கு செய்த
பாவம் இன்றளவும் அவரை தொடர்கின்றது. சென்றமுறை எமக்கு கிடைக்கவிருந்த
இயந்திரம் களுத்துறைக்கு மாற்றப்பட்டது அதே போல் இம்முறை பதுளைக்கு
அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. நான் பதுளை மக்களுக்கு
கிடைப்பதற்கு எதிர்க்கவில்லை ஆனால் இவ் உபகரணம் இல்லாமல் அவதியுறும் எம்
மக்களுக்கு இம் முறை எவ்வித ஏமாற்றமும் இன்றி கட்டாயம் கிடைக்க வேண்டும்.
அத்துடன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய CT Scan கருவியும் செயலற்று
காணப்படுகின்றது இதனால் மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகம்
கொடுக்கின்ரர்கள். இதன் காரணமாகவே மக்கள் கடன்பட்டு பாரிய பணம் செலவு
செய்து தனியார் வைத்தியசாலைகளை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை
ஏற்ப்பட்டுள்ளது. மலேரியா மற்றும் டெங்கு ஊழியர்கள் தொடர்பிலும் கூடிய
கவனம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். மற்றும் எமது மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் சமையலறையில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும்
இன்றைத்தினம் எனது உரை அமைந்திருந்தது. வைத்தியசாலையின் சமையலறையில்
தினமும் 1500 பேருக்கு சமைக்கின்றார்கள். குறிப்பாக மதிய வேளையில்
குறைந்தது 700 பேருக்கு குறையாமல் சமைக்கின்றனர். பலதரப்பட்ட நோயாளர்களின்
உணவு வகைகள் மற்றும் ஊழியர்களுக்கான உணவுகள் இவற்றுள் அடங்கும். ஆனால்
அவற்றை சமைப்பதற்கு தகுத்த ஆளணி பற்றாக்குறை பல வருட காலமாக
நிலவிவருகின்றது. அதிலும் தேர்ச்சி வாய்ந்த சமையல்காரர் அங்கு ஒருவர்
மாத்திரமே உள்ளார். சமையலறைக்கு தேவையான தகுந்த ஆளணிகளை உருவாக்குவது
மிகவும் அவசியமானதாக உள்ளது. மற்றும் சமயலறைக்கு போதியளவிலான சமையலறை
உபகரணங்கள் மற்றும் அதற்குரிய அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அங்கு
காணப்படவில்லை அதற்கான கோரிக்கைகள் அமைச்சிடம் கொடுக்கப்பட்டும் அதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது . நாளாந்தம்
சமையலுக்கு தேவையான பொருட்களை மரக்கறி, பலசரக்கு, பாண், முட்டை அடங்கலாக
அன்றைய நாட்களிலே வைத்தியசாலை நிர்வாகம் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவ்
பொருட்களை ஒப்பந்ததாரர் நேரம் தாழ்த்தியே விநியோகிக்கின்றார்.
அமைச்சரவியின் அனுசரணையுடனே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என
தெரியவந்துள்ளது. அதிலும் நிர்வாகத்தினர் கோரிய நிறைக்கு குறைவான அநேக
பொருட்களையே அநேக சமயங்களில் விநியோகம் செய்கின்றனர். மதிய உணவுக்கான
மரக்கறி மற்றும் பலசரக்கு பொருட்கள் பல தடவைகள் காலை 09.30 மணிக்கு
பின்பும், இரவு உணவுக்கான பொருட்கள் மாலைவேளையும் விநியோகம்
செய்யப்படுகின்றது. விநியோக நடவடிக்கையிலும் பல குறைபாடுகள் அசமந்த போக்கு
காணப்படுகின்றன.மீன் மற்றும் இறைச்சி விநியோகமும் மிகவும் காலம் தாழ்த்தியே
விநியோகிக்கப்படுகின்றது. நோயாளர்களுக்கான மதிய உணவு 12.30 மணிக்கு
வழங்கப்பட வேண்டும். அவ் விநியோக நடவடிக்கை தடைப்படின் அன்றைய தினம்
அனைத்து நோயாளிகளும் ஊழியர்களும் பட்டினியாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய
நிலை காணப்படுகின்றது. பல நேரங்களில் விடுதியில் உள்ள நோயாளர்களுக்கு உணவு
நேரம் தாழ்த்தி வழங்கப்படுவதும் கவனத்தில் கொண்டுவரப்படுள்ளது. மதிய
உணவுக்கான நடவடிக்கைகள் காலை 9.30 மற்றும் 10.00 மணிக்கு பின்னரே
நடைபெறுகின்றது. குறிப்பிட்ட நேரத்திக்குள் 3 மணித்தியலங்களுக்குள்
நூற்றுக்கணக்கனவர்களுக்கு அதிலும் பல்வேறு பட்ட நோயாளர்களுக்கு தேவையான
உணவு வகைகளை சரியான முறையில் தயாரிப்பது என்பது மிகவும் ஆச்சரியமாக
படுகின்றது. அதனால் உணவின் தரம் சுவை மற்றும் சுகாதாரம் என்பன கேள்விக்
குறியாக்கப்படுகின்றது. அத்துடன் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் போது சில
விடுதிகளில் சரியான முறைகளை கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டும்
நோயாளர்களிடம் இருந்தும் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது தூர
இடங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் எமது மக்களே. இதற்கான நடவடிக்கைகள்
உடனடியாக எடுக்கப்படவேண்டும். வைத்தியசாலை நிர்வாகமானது புதிய
கட்டிடங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகள்
வரவேற்கத்தக்கது அதே நேரம் இவ் அத்தியாவசியமான உணவு விடயத்திலும் கூடுதல்
கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Post A Comment:
0 comments so far,add yours