(ஏ.எஸ்.மெளலானா)


கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே செயற்றிறன் மதிப்பீட்டை மேற்கொண்டு, அதற்கமைவாக இம்மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய வளங்களை உள்ளூர் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு திட்டத்தின் (LDSP) ஊடாக வழங்குகின்ற செயற்பாடு வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் 02ஆம், 03ஆம் படி நிலைகளில் இருந்து வந்த கல்முனை மாநகர சபையானது இவ்வருட ஆரம்பம் முதல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் தொடர்ந்தேச்சியாக செயற்படுத்தி வந்த நிர்வாக சீர்படுத்தல்கள், சீரான ஆளணி முகாமைத்துவம், திட்டமிட்ட அடிப்படையிலான உட்கட்டமைப்பு விருத்திகள், நவீனமயப்படுத்தப்பட்ட முகப்பு அலுவலக வசதிகள் என்பவற்றோடு மாநகர சபையின் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் குழாத்தின் அயராத முயற்சிகளின் பயனாக இவ்வருட செயற்றிறன் மதிப்பீட்டில் பாரிய வளர்ச்சி வீதத்தினை வெளிப்படுத்தியதன் அடிப்படையிலேயே முதலாம் படி நிலைக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் முதலாம் படி நிலைக்கு தெரிவாகியுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை கல்முனை மாநகர சபையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours