ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மஹரகமவில் நடைபெற்ற அரச கலாபூசனா
விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையில் தெரிவான 10 முஸ்லிம்களில் ஒருவராக
ஓய்வுபெற்ற உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் கலாபூஷண பட்டம்
பெற்றார்.
மிகவும் போட்டித் தன்மை மிகுந்த கலாபூஷண விருது என்பது இலங்கையில் ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரமாகும்.
கிழக்கு
மாகாணத்தில் இலக்கியப் பரப்பில் சாய்ந்தமருது கொடிகட்டிப் பறந்த
காலத்தில் இவ்வூரில் இலக்கியம் ஊற்றெடுத்த ஒரு பழமை வாய்ந்த குடும்பமாக
மருதூர் குடும்பத்தைக் குறிப்பிடலாம். இக்குடும்பத்தில் பல்நூலாசிரியர்
உலகறிந்த இலக்கியவாதி மர்ஹூம் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் மற்றும் கலா
பூசணம் ஏ.பீர்முஹம்மது மர்ஹூம் மருதூர் அலிகான், மருதூர் அக்பரலி,
மருதூர் ஏ. ஹசன் ஆகியோர் தத்தமது ஆளுமைக்கேற்ப இலக்கியத்தை வளர்த்து
நாடறியச் செய்தனர்.
இவர்களின்
ஒன்றுவிட்ட சகோதரரான கல்முனை தஸ்தகீர் இக்குடும்ப இலக்கியத்தில் இரண்டறக்
கலந்து இப்பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டு தன்னையும் ஓர் கவிஞராக,
கலைஞராக, எழுத்தாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.
இவரது
பாடசாலை காலங்களில் மறைந்த பிரபல இலக்கிய ஜாம்பவான் தெணியானின் சகோதரரான
க.நவம் எழுதிய "இந்த தேசத்துக்காக" எனும் நாடகம் தேசிய மட்ட தமிழ் தின விழா
போட்டி 1973 இல் தங்கப்பதக்கம் வென்றது. இந்நாடகக் குழுவில் தஸ்தகீர்
அவர்களும் ஒருவராக இருந்தார். இக்குழுவில் ஏ.அப்துல் றஸாக், ஏ.அக்பர் அலி,
எம்.ஐ.எம். சித்தீக், எஸ்.யூ.அன்வர் சித்தீக் ஆகியோரும் இடம்பெற்றனர்.
இவர்
தனது முதலாவது கவிதையை தான் கல்வி கற்ற கல்முனை சாகிறாவினால்
வெளியிடப்பட்ட "சாஹிறா" சஞ்சிகையில் 1978 ஆம் ஆண்டு "நோன்பாமே நோன்பு"
என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. இக்கவிதை பலரின் பாராட்டுக்களையும்
பெற்றது. இச்சஞ்சிகையின் உப பத்திராதிபராகவும் இருந்து இவர்
செயற்பட்டுள்ளார். இதிலிருந்து இலக்கிய உலகில் சஞ்சரித்து பல கவிதைகளையும்
கட்டுரைகளையும் எழுதி உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்.
1982
ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தில் முழு நேர
டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்திசெய்த பின் சுகாதாரத் திணைக் களத்தின்
பொது சுகாதாரப் பரிசோதகராகவும் பின்னர் மேற்பார்வை பொது சுகாதாரப்
பரிசோதகராகவும் பல வருடங்கள் கடமையாற்றினார்.
பின்
சுகாதாரத் திணைக்களத்தின் உணவு மருந்துகள் பரிசோதகர் பதவிக்கான போட்டிப்
பரீட்சையில் சித்தி அடைந்து விசேட பயிற்சியின் பின் பிராந்திய உணவு
மருந்துகள் பரிசோதராக நியமிக்கப்பட்டார். இப்பதவிகளின் மேலதிக
நிபுணத்துவப் பயிற்சிகளை ஜப்பான்,தாய்லாந்து, புதுடில்லி போன்ற நாடுகளில்
பெற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு,
மாத்தளை, தம்புள்ளை, அம்பாறை, கல்முனை போன்ற பிரதேசங்களில் கிட்டத்தட்ட
நாற்பது வருடங்கள் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தூய்மையான சிறப்புச்
சேவையாற்றி மூவின மக்களின் நன்மதிப்பை பெற்று ஓய்வு நிலையை அடைந்துள்ளார்.
இவருடைய
கடமைக் காலத்தில் பல்லின சமூகங்களுடன் சுகாதார சேவை செய்த
சந்தர்ப்பங்களில் பொது மக்களுடன் நெருங்கிப் பழகியமையால் சமூகத்தில் உள்ள
சுகாதாரக் குறைபாடுகளையும், சுகாதாரத் தேவைகளையும் இனம் கண்டு சுகாதாரப்
பரப்பில் சமூகங்கள் விழிப்படைய வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில்
திடகாத்திரமான சமூகம் உருவாக வேண்டும் என்பதையும் நோக்காகவும்
கருப்பொருளாகவும் கொண்டு தனது கவிதைகளையும் கட்டுரைகளையும் வரைந்துள்ளார்.
சுகந்தப்
பூக்கள், இன்று தான் திருமணம், நான் ஒரு உயிர் கொல்லி, முனையின் மகுடம்,
நோய்களின் கேடயம் நோன்பு, சமநிலை, துஆ செய்வோம், மாசடைந்த மானுடம்,
சுகப்பிரசவம், தாய், சமாதான ஒளியேற்ற, சமிபாடு, யார் ஓவியன்?, கோவிட் பிண
வாடை, அதிவலு, காகம், உலக கிட்லர் கொரோனாவே, தாயின் பிம்பம், நடமாடும்
கைதிகள் நாம், என்றும் வாழும் ஜிப்ரி, பாவிகள் யார்?, செருப்புச்சோடி,
முகக்கவசம் போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.
மலேரியா
தடுப்பிற்கு புதியதோர் அணுகுமுறை, டெங்கு காய்ச்சல், போதைப் பொருள்
பாவனையை இஸ்லாம் முற்றாகத் தடுக்கிறது, முச்சக்கர வண்டிகளின் சாரதிகள்
பயணிகள் நலன் கருதி சேவை வழங்க வேண்டும், புகைத்தல் ஒரு சமூகத்துரோகம்,
Smoking, an anti social phenomenon, கல்விக் கொடை என்றுமே
மரணிப்பதில்லை, மக்கள் பணிக்காகவே வாழ்ந்த டாக்டர் ஜமீல், Alcoholism and
its serious impairments, மனித குல ஆரோக்கியத்துக்கு தொற்றா நோய்கள்
அச்சுறுத்தல், கோவிட் 19 அச்சுறுத்தல் நிலவும் காலத்தில் பாதுகாப்பான சிகை
அலங்காரம் அவசியம், புவியில் உயிரினங்களின் வாழ்வுக்கு பிளாஸ்டிக்
பொருட்கள் அச்சுறுத்தல், சிகரெட் மீதான வரியை அதிகரிப்பதன் மூலம் அரசின்
வருமானத்தை உயர்த்தலாம், கொரோனா தொற்றுக்காலத்தில் புகைத்தல் மதுபான
பாவனையில் வீழ்ச்சி, கொவிட் 19 தொற்றும் புகைத்தலும், எமது உணவுகளை
ஆக்கிரமித்துள்ள நச்சுப்பதார்த்தங்கள், உணவு பற்றாக்குறை உருவெடுப்பதை
தவிர்க்க பயிர்செய்கையில் முழுமையாக இறங்குவோம், காடுகளை அழிப்பதால்
உயிரினங்களின் எதிர்கால இருப்புக்கு உருவாகி வரும் பேராபத்து, மருதூர் ஏ
மஜீதுடனான நேர்காணல், இக்பால் அலிஎழுதிய இளம் தலைமைத்துவ ஆளுமை 'நூல்
விமர்சனம்' போன்ற ஆக்கங்களை எழுதியுள்ளார்.
கல்முனை
தஸ்தகீர் பாடசாலைக்கு அப்பால் வெளியுலக இலக்கியத்திலும் ஈடுபட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டில் கல்முனை இளைஞர் கலை வட்டம் எனும் அமைப்பை உருவாக்கி
அதன் பதில் தலைவராக செயல்பட்டார். இந்த அமைப்பின் தலைவராக காலம் சென்ற
நாடறிந்த கலைஞர் ஏ. ஆர். எம். ஜிப்ரி அவர்கள் இருந்தார். இம்மன்றத்தினால்
பல நாடகங்கள், கவியரங்குகள், பேச்சுப்போட்டிகள் போன்றவைகளும்
நடாத்தப்பட்டன. நாடக இரவுகள், விடியும் வரை, இரவின் மடியில் போன்ற கலை,
இலக்கிய நிகழ்வுகளையும் நடாத்தினர். இக்குழுவில் ஏ ஆர் எம் ஜிப்ரி, ஏ.
அக்பர் அலி, எம் எம் பாஸில், எம் அப்துல் வஹாப், எம் ஏ.மஜீட், சாந்தூர்
சலீம் கான், மீரா பாறூக் ஆகியோருடன் தஸ்தகீர் அவர்களும் அங்கம்
பெற்றிருந்தார்.
இக்காலகட்டத்தில் டோமினிக் ஜீவா வின் மாதாந்த இலக்கியச் சஞ்சிகையான "மல்லிகை" யைத் தொடர்ந்தும் வாசிப்பதில் ஆர்வமாய் இருந்தார்.
1978
ஆம் ஆண்டில் மறைந்த மருதூர் கொத்தனின் ஆக்கங்களை நூல் உருவில் கொண்டு
வருவதற்கான ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட "நாடக இரவு"
நிகழ்வில் சாய்ந்தமருது உபா பாரூக் அவர்களினால் எழுதப்பட்ட "நீதிக்குப்
பின் தான் பாசம்" எனும் தலைப்பிலான நாடகம் மருதமுனை திறந்த வெளியரங்கில்
அரங்கேற்றப்பட்டது. அதில் உமர் (ரலி) அரசின் அமைச்சரவையில் (கலிபாக்களில்)
ஒருவராக தஸ்தகீர் நடித்தார்.
இதே
கால கட்டத்திலேயே "கோடை இடி" என்னும் கையெழுத்து சஞ்சிகையை அதன்
பத்திரிகை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். இச்சஞ்சிகையில் இலக்கியம்,
கவிதை, கட்டுரை, துணுக்குகளுடன் சமூகத்தின் மத்தியில் காணப்பட்ட
குறைபாடுகளை சுட்டிக்
காட்டி அவற்றை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்தது. இச் சஞ்சிகை மூலம் இளம் இலக்கிய ஆர்வலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
மேலும்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், ஊவா
வானொலி போன்ற அமைப்புக்களினால் இவருடன் நடாத்தப்பட்ட நேர்காணல்
நிகழ்வுகளில் பங்கு கொண்டு பொது மக்களுக்கு பல பிரயோசமிக்க கருத்துகுகளை
வழங்கினார்.
இக்கால
இலக்கியவாதிகளினால் உணரப்படாத, செய்யப்படாத பல சிறந்த விடயங்கள் அப்போது
உள்ள இலக்கிவாதிகளால் நடாத்தப்பட்டது. அக்காலத்தில் அதாவது 1995 களில்
உருவாக்கப்பட்ட "தென்கிழக்கு ஆய்வு மையம்" எனும் அமைப்பினால் மூத்த
இலக்கிய முதுசங்களையும் கவிஞர்களையும் பாராட்டி வாழும்போதே வாழ்த்திக்
கௌரவப்படுத்தினார்கள். உதாரணமாக மருதூர் வாணர், மருதூர்க் கொத்தன், டாக்டர்
ஏ எம் அபூபக்கர், மருதூர் ஏ மஜீத், அன்பு முகையதீன் ஆ.ஸ. அப்துல் ஸமது
போன்றவர்களை பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இவரோடு
சம காலத்தில் எழுதியவர்கள் உ.பாறூக் (உபா), மருதூர் ஏ. அலிக்கான்,
சோலைக்கிளி அதீக், உமா வரதராஜன், பாண்டியூரான், சித்தீக் காரியப்பர்,
முபாறக் ஏ. மஜீத், ஏ.கே.எம்.நியாஸ், ஏ.எம்.ஏ.நஸீர்,ஏ.பீர்முகம்மது, அழுத்கம
யூ.எம்.பாஸி, மருதூர் ஜமால்தீன், மருதூர் அக்பர் அலி, மர்ஹூம் நூறுல்
ஹக், ஆர்.எம்.நௌஸாத், எச்.எம். பாறூக், சுல்பிகா சரீப், உஸ்மான் சாஹிப்,
பி. எம். எம். ஏ. காதர், டாக்டர் எஸ் நஜிமுதீன், பேராசிரியர் எம் ஐ எம்
சித்திக், எஸ். நசுருதீன், கலாநிதி சுல்பிக்கா (கல்முனை) ஏ.எச்.ஏ.பஸீர்
,கே.எம்.ஏ. அஸீஸ், மருதமுனை விஜிலி, மருதூர் ஏ. ஹஸன், ஏ.எச்.ஏ அஸீஸ்,
டாக்டர் எம் ஐ எம் ஜெமீல், மீராசாகிபு, கே. எல். அபூபக்கர் லெவ்வை,
கவிதாயினி அணார், கலைமகள் ஹிதாயா, கவிதாயினி சித்தி ஜரீனா கரீம், ஜெமினா
ஹனூன், ரஹ்மத் மன்சூர், போன்றோரைக் குறிப்பிடலாம்.
இவரது
சொந்த கற்பனையில் எழுதப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட சிலைகளும் சிரிக்க
வைக்கும், வைத்தியம், பள்ளிக்கூடம் போன்ற நாடகங்கள் மிகவும்
பிரபல்யமிக்கவை.
இவரது
கட்டுரைகள்,கவிதைகள் அனைத்தும் தேசிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி,
நவமணி, டெய்லி நியூஸ் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும்
சுகி,அரண்,சுகமஞ்சரி, ஸாஹிறா போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவர்
கல்முனை பிரதேச செயலகத்தின் கலாச்சார அதிகார சபையின் செயற்குழு
உறுப்பினராக செயற்பட்டு இச்சபையினால் நடாத்தப்படும் சகல கலாச்சார
நிகழ்வுகளுக்கும் கூடிய ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். மேலும் இலங்கை
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், கண்டி மலையக கலை கலாச்சார
சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளராகவும், இந்திய தமிழ் பட்டறை இலக்கியப்
பேரவையின் இலங்கைக்கான கிளையின் அங்கத்தவராகவும், இந்திய திருவள்ளுவர்
பத்திரிகையாளர் சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டு
வருகிறார்.
இவரின் இலக்கிய செயற்பாடுகளைக்
கௌரவித்து இலங்கை கலாசார அதிகார சபை இவருக்கு "கலைஞர் சுவதம்" விருதினை
கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.
இவரின்
கவிதைகளுக்கு இலங்கை மற்றும் இந்தியா நாடுகளினால் நடாத்தப்பட்ட
போட்டிகளில் வெற்றிபெற்று பல வாழ்த்துக்களும் பட்டங்களும் கிடைத்துள்ளன.
அவை சிந்தனைச் சிற்பி, கவி மாமணி, பாவலர், சமூக சிந்தனையாளர்,
கவிச்செம்மல், கவிப் புயல், கவிச்சித்தர், காதல் கவிநிலவு என்பனவாகும்.
இவர்
இலக்கிய உலகத்துக்குள் புகுந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆகின்றன. இவரது
பல்துறை செயல்பாடுகளையும் கௌரவித்து பல பாராட்டுக்களையும் விருதுகளையும்
பட்டங்களையும் பெற்றுள்ளார்.
பிரதேச
மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம்_ தேசிய மட்டம், சர்வதேச மட்டங்களில்
இவருக்கு பல கௌரவ விருதுகள் கிடைத்துள்ளன. கண்டி மலையக கலை கலாச்சார
நிலையம், அகில இன நல்லுறவு ஒன்றியம், தடாகம் கலை இலக்கிய வட்டம், லக்ஸ்டோ
மீடியா நெட்வேர்க், முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி, இலங்கை சென் ஜோன்
அம்பியுலன்ஸ் பிரிவு, இலங்கை சாரணர் சங்கம், இலங்கை கலாசாரத் திணைக்களம்
போன்ற அமைப்புக்கள் இவரது கலை, கலாசார மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி
கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தஸ்தகீர்
அவர்களின் தனிப்பட்ட குடும்பம் ஒரு இலக்கிய குடும்பமாகும். மூத்த சகோதரர்
மர்ஹும் செய்யது முஹம்மது (அதிபர்) தனது சொந்த சர்ப்பனாவினால்
பாடல்களுக்கு இசையமைப்பவர். இவரது இரண்டாவது சகோதரர் மர்ஹும் எஸ்.அப்துல்
ஜப்பார் இவர் பாடல்களை தானே இயற்றி இசையமைத்து பாடுபவர். இவரது மூத்த
புதல்வன் ரி. முஹம்மத் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்
போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றவர். இவரது கனிஷ்ட புதல்வி ரி. பாத்திமா
ஹப்ஷா இவர் பாடசாலை மட்டத்தில் "எதிர்நீச்சல்" எனும் நாடகத்தில் தாயாக
நடித்தார். இந்த நாடகம் இலங்கை ரூபவாஹினித்திரையில் 45 நிமிடங்கள்
ஒளிபரப்பப்பட்டது. மேலும் "முன்னேற்றம்" எனும் மேடை நாடகத்திலும் மகளாக
நடித்து பலரின் பாராட்டுக்களைப்பெற்றார். இவரது மருமகன் எஸ்.அஷ்ரப்கான்
சிரேஷ்ட ஊடகவியலாளர் இவரும் பல் துறை சார்ந்து தனது ஆக்கங்களை எழுதி
வருகிறார். இக்குடும்பம் இப்பிரதேசத்தின் ஒரு கலை ஆர்வமுள்ள
குடும்பமாகும்.
(எஸ்.அஷ்ரப்கான் - 076012 3242)
Post A Comment:
0 comments so far,add yours