புத்தளம் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் சிரேஷ்ட ஆசிரியருமான அல்ஹாஜ் ஏ. இஸட். நமாஸ் புத்தளம் மாவட்டத்தின் குறிப்பாக ஊடகத்துறையின் அபிவிருத்திக்கும் புதிய ஊடகவியலாளர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றியவர் என சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளராகவும் செயற்குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் பணிபுந்த நமாஸ், குறிப்பாக இளைய தலைமுறையினர் ஊடகத்துறைக்குப் பிரவேசிப்பதற்கு பெரும் பங்காற்றினார். முத்தெழில் என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதனூடாக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சியை வழங்கினார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான நமாஸின் இழப்பு குடும்பத்துக்கு மட்டுமன்றி, ஊடகத்துறை க்கும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியராக, ஊடகவியலாளராக, சமூக செயற்பாட்டாளராக நமாஸ் ஆற்றிய பங்களிப்பு புத்தளம் மக்களது மனதில் என்றும் பதிந்திருக்கின்றது என்று நம்புகிறோம். லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையில் செய்தியாளராக தனது பணியை ஆரம்பித்த இவர், ஊடகப்பயிற்சியாளராகவும் பணிபுரிந்து இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றினார். சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூலம் புத்தளம் ஊடகவியலாளர்களுக்கு தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பயிற்சிகளை வழங்குவதிலும் முன்னோடியாகச் செயற்பட்டார்.
பிரதேச சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நமாஸ் ஆற்றிய பங்களிப்பு அலாதியானது.
இவரது மறைவானது பிரதேசத்திற்கு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக! என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours