(சுமன்)



சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை அத்துமீறி கையகப்படுத்தியவர்களிடமிருந்து பெற்று உரிய மக்களுக்கு தடையின்றி வழங்கி அம்மக்களுக்கு ஒரு நியாயத்தை வழங்க காணி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பாராளுமன்றில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் ஒத்திவைப்புப் பிரேரணையின் போது யுத்த சூழலில் பலவந்தமாகக் கைப்பற்றிய சம்மாந்துறை தொட்டாச்சுருங்கி நெற்செய்கைக் காணியினை உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக பிரேரணையினைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இப்பிரேரணை தொடர்பில் காணி அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை இந்;த விடயத்திற்கான நடவடிககைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டுள்ளதாவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 கிராம சேவையாளர் பிரிவில் தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை யுத்த சூழலில் பலவந்தமாகக் கைப்பற்றிய பெரும்பான்;மை சமூகத்தினரிடமிருந்து இன்றுவரை அக்காணியினை உரியவர்களிடம் வழங்காது அத்துமீறி தொடர்;ந்தும் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகின்றனர். இச் செயற்பாட்டை உடன் நிறுத்தி உரிய மக்களிடம் அக்காணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்படி விடயம் தொடர்பாக காணி அத்துமீறிப் பிடித்தவர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு காணியின் சொந்தக் காரர்களுக்கே காணி மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் இக்கால கடட்டத்தில் நிலவிய போர்ச்சூழலினால் அம்மக்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்ததன் காரணமாக அந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இருந்தும் இதன் பின்னர் இக்காணி தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் 2015.08.27ம் திகதி விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் 2016.11.04ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துiயாடலில்; காணி உத்தரவுபத்திரம் உடையவர்களுக்கு காணியினை மீள வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு காணி உரித்துடையவர்களுக்கு அக்காணியினை வழங்குவதற்கு அனைத்து செயற்பாடுகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்றுவரை இம்மக்களின் காணியினைக் கொடுப்பதற்கு இக்காணிகளை கைப்பற்றியவர்களும் சில அரசியல்வாதிகளும் மறுதளித்த வண்ணமாகவே இருக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை அத்துமீறி கையகப்படுத்தியவர்களிடமிருந்து பெற்று உரிய மக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு இப்பிரேரணையை நான் முன்மொழிகின்றேன்.

இந்தத் தொட்டாச்சுருங்கி நெற்செய்கைக் காணியானது அங்குள்ள மக்களுக்கு கல்லோயாத் திட்டத்திலே வழங்கப்பட்ட காணியாகும். அவ்வாறு வழங்கப்பட்டதன் பிற்பாடு புத்தங்கலை என்ற பிரதேசத்தில் இருந்த தேரரும், இராணுவத்தினருமாக இணைந்து இந்;த மக்களை திட்டமிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவைகள் இந்த இடங்களை தங்களுக்குத் தரவேண்டும் என்று கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இங்கு குறிப்பிட்டதைப் போன்று 2016ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலே நானும் கலந்துகொண்டிருந்தேன். அப்போது மாவடட்ட செயலாளராக துசித்த வனியசூரிய என்பவர் இருந்தார். அங்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளிடம் பூரணமான உத்தரவுப் பத்திரங்கள் இருந்தன. இக்காணிகளைக் கையகப்படுத்தியவர்களிடம் எந்த ஆவணமும் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் மக்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் இதுவரைக்கும் அந்த நடைமுறை சாத்தியப்படவில்லை.

தொடர்ச்சியாக அந்த மக்கள் அவர்களின் காணிகளுக்குச் சென்று பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருக்கின்றார்கள். எனவே இந்த உயரிய சபை அவர்களுக்கு ஒரு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணையை முன்வைக்கின்றேன்.

இப்பிரேரணை தொடர்பில் காணி அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை இந்;த விடயத்திற்கான நடவடிககைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours