(எஸ்.அஷ்ரப்கான்)




இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்தி நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியாது.

ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் அழிந்தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது. அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாகவும் போய்விட்டது.

சுனாமி ஏற்பட்டு  19 வருடங்கள் கடந்திருக்கின்றது. ஆனால் அதன் வடுக்களிலிருந்து இன்னும் இலங்கையின் சில பகுதிகள் மீளாத நிலையில் உள்ளது.  இங்கு கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரசேங்களை மிக விசேட கவனம் செலுத்தி மீள் கட்டுமான வேலைகள் அதி தீவிரமாக கடந்த 2005, 2006 காலப்பகுதியில் நடந்தேறி முடிந்துள்ளது. ஆனால் எமது சில பிரதேசங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றது.  இன்னும் அக்கரைப்பற்றிலும் அதனை அண்டிய  பிரதேசங்களிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென்று சவூதி அரேபிய அரசினால் கட்டப்பட்ட வீட்டுத்திட்டம் இன்னும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது கானல் நீரான கதையாகிப் போயுள்ளது. தற்போது இந்த வீடுகள் விஷ ஜந்துக்களும் மிருகங்களுக்குமான குடியிருப்பாக மாறியிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் பல்வேறு குற்றச் செயல்களும் அங்கு இடம்பெற்று வருகின்றது. இந்த விடயத்தில்  ஒட்டுமொத்த முஸ்லிம்  அரசியல்வாதிகளும் படுதோல்வி அடைந்துள்ளனர்.  பேரினவாத சக்திகளின் விடாப்பிடியான துவேச நிலைமைகள் அரசியல்வாதிகளின் பொடுபோக்கு என்பன இதற்குக் காரணங்களாகும். 

இவ்வாறான ஒரு இயற்கையின் சீற்றம் ஏற்படும்போது மக்களே விழிப்பாகவும் சிறப்பாகவும் தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கடந்த சுனாமி பேரழிவு  எமக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் ஏற்பட்ட இதேவேகமுள்ள நிலநடுக்கம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் ஆசியாசின் பல நாடுகள் தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும் என்று புவியமைப்பியல் வல்லுநர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.

அதுபோல் அண்மையிலும் பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவின்  தரோன் நகரில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து பப்புவா நியூகினியாவின் கிழக்குப் பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதுபோல் உலகின் பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி இந்நில நடுக்கம் ஏற்படுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதும் தற்போதும் நிகழ்ந்தவண்ணமே உள்ளது. 

இயற்கை அழிவுக்கு முகம் கொடுத்தல்.

........................................

சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்து போனது. அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்.

உலகில் சுனாமி, பூகம்பம், புயல், மழை வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல நடந்து கொண்டேயிருக்கின்றது. கடந்த 100 வருடங்களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்பவங்களாக 1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர், 1935 ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976 ல் சீனாவில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978 ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல்.

இவை தவிர சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்பிகொள்வதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றது. இவை அனைத்தும் மனிதனை துய்மைப்படுத்தவும், சிந்திக்கவும் வைத்தது.

அனர்த்தங்கள் சம்பவிக்கும் வேளைகளில் அவற்றிற்கு ஆயத்தமாகும் முகமாக அனர்த்த முன்னாயத்த திட்டங்கள், அறிவூட்டல், அனர்த்த அறிவிப்பு ஒலியெழுப்பல்,   சகல மட்டங்களிலும் விருத்தியாக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டம் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கை  ஆகியவற்றிலும் இந்த விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவம் பல்வேறு செயற்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டு கட்டளை இடுதல் கட்டுப்படுத்தப்படுத்தல்களை விட ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் விதத்தில் நிறுவக மாதிரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் கட்டளை இடுதலும், கட்டுப்படுப்படுத்தலும் ஒவ்வோரு அரச நிறுவன அதிகாரிகளுக்கிடையிலேயே பொருந்தக்கூடும். ஒப்படைக்கப்பட்ட பணி, பொறுப்புக்கள் மற்றும் ஆற்றல் வாய்ந்த முகவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புமே முக்கிய அம்சங்களாகும். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கொண்டு இருக்கையில் மாகாண அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு, மாகாண, மாவட்ட, உள்ளுராட்சி, பிரதேச, கிராம சேவையாளர் மட்டங்களில் பதிலிறுப்பு, மீளுமை பிரயத்தனங்கள்,முகாமைத்துவம், அவசர தகவல்களைப் பரப்பல் போன்றவற்றிற்கான ஒருங்கிணைப்புப் பிரிவாக செயற்படுகிறது. இது நிருவாக கட்டமைப்பு விடயங்களாகும்.

சுனாமி வரலாறு

கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை 'பிலோப்போனேசியப் போர் வரலாறு' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன் முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நில நடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நில நடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து இராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில் கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரியப் பிரிய அதன் தட்டு வெப்ப இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் 1946, அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ் நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஹைட்ரேட் வெளியானது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். ஜப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது.

நிலச்சரிவுகளால் உருவாக்கப்பட்ட சுனாமி.

................................................

1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை 'சியோருக்கஸ்' என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958ல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாஸ்காவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது.

சுனாமி பேரலை தாக்கி 19 வருடங்கள் கழியும் நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதே மனிதர்கள் அதிலிருந்து ஓரளவு தம்மை தற்காத்துக் கொள்ள சிறந்த வழி ஒன்றாகும். வெறுமனே நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தி ஒவ்வொரு வருடமும் இழந்த உயிர்கள், உடமைகளை நினைத்து அழுது புலம்பி கட்டிப் புரள்வதில் எவ்வித பயனும் மக்களுக்கு ஏற்பட்டுவிடப்போவ தில்லை

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours