(சுமன்)




ஈழத்தமிழினம் என்று சிரிக்கின்றதோ அன்று தான் தன் பிறந்தநாளைக் கொண்டாடுவேன் என்று உறுதி பூண்டு, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினையும், தமிழீழ தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்த மாபெரும் கலைஞனை நாம் இழந்திருக்கின்றோம். அந்த வகையில் புரட்சிக் கலைஞர் விஜயகாந் அவர்களின் இழப்பானது ஈழத்தமிழினத்தை ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

புரட்சிக் கலைஞர் நடிகர் விஜயகாந் அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய சினிமாத்துறையில் உள்ளவர்களில் இலங்கைத் தமிழர் வரலாற்றுடன் தனித்துவமான இடத்தினைப் பேணியவர்கள் ஒரு சிலரே. அதில் முக்கிய இடம் பிடித்த உன்னத மனிதர் நடிகர் புரட்சிக் கலைஞர் விஜயகாந் அவர்கள். சினிமாத்துறையில் மாத்திரமல்லாது அரசியற் துறையினூடாகவும் அவர் தமிழர்களுக்கு ஆற்றிய சேவைகள், வழிப்புணர்வுகள், வழிநடத்தல்கள் மிகவும் போற்றத்தக்கது. அதிலும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகள் போற்றப்பட வேண்டியவை. அந்த ரீதியில் அவரின் இழப்பானது ஈழத்தமிழினத்தை ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினையும், தமிழீழ தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்தவர். எமது தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாமனிதர் விஜயகாந். இவரின் இழப்பானது என்றும் ஈடுசெய்யப்பட முடியாத ஒன்றாக எமது மனங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய சினிமாத்துறையில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் உண்மை நிலைமைகளை எடுத்துச் சொல்லக் கூடிய அற்புதமான மனிதராகச் செயற்பட்டு வந்தார்.

தமிழ் சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர் அவர்களைத் தொடர்ந்து ஈழப் போராட்டம் தொடர்பில் உன்னத நிலைப்பாட்டோடு செயற்பட்டவர் நடிகர் விஜயகாந். ஈழத்தமிழர்களை என்றும் அன்பாக நேசித்த மாமலையை நாம் இன்று இழந்திருக்கின்றோம். ஈழத்தமிழினம் என்று சிரிக்கின்றதோ அன்று தான் தன் பிறந்தநாளைக் கொண்டாடுவேன் என்று உறுதி பூண்டு அவர் இறக்கும் வரை தனது பிறந்தநாளைக் கொண்டாடாது ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணிப்பினை மேற்கொண்டவர் இவர். தேசியத் தலைவர் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக தனது மகனுக்கு பிரபாகரன் என்ற பெயரினைச் சூட்டினார். இவ்;வாறு ஈழத்தமிழர்களை மிகவும் அன்பாக நேசித்த மாபெரும் கலைஞனை நாம் இழந்திருக்கின்றோம்.

இறைபதம் அடைந்த நடிகர் விஜயகாந் அவர்களுக்கு தமிழீழ மக்கள் சார்பாகவும், முன்னாள் போராளிகள் சார்பாகவும், ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாகவும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கும் எமது வேதனையைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours