(எம்.ஏ.றமீஸ்)
அம்பாறை மவாட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இம்மாவட்டத்தின் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கனத்த மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
அதிக மழை காரணமாக இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட தாழ் நில விவசாயச் செய்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இம்மாவட்டத்தின் தாழ்நில நெற்செய்கைகளுக்கும் பாரிய தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பலத்த மழையுடனான காலநிலை காரணமாக உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் பாதிப்படைந்துள்ளன. சீரற்ற காலை நிலையால் அம்பாறை மாவட்டத்தில் அடிக்கடி மின்துண்டிப்பும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் கடற் பரப்பில் பலத்த காற்றுடனான மழை பெய்து வருவதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் கடற்றொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. கடற்றொழில் வெகுவாகப் பாதிபடைந்துள்ளமையால் கடல் மீன்களின் விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் இம்மாவட்டத்தின் பன்னலகல பிரதேசத்தில் 97.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம்; தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பாணம பகுதியில் 87.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மகாஓயா பகுதியில் 83.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 74.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இங்கினியாகல பிரதேசத்தில் 65.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், எக்கல் ஓயாவில் 65.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், சாகாம பிரதேசத்தில் 60.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை பகுதியில் 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இலுக்குச்சேனையில் 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தீகவாபி பிரதேசத்தில் 53.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மாலை வேளைகளில் வீசுகின்ற பலத்த காற்றின் காரணமாக சில பிரதேசங்களில் கடல் அலை சுமார் பத்தடிக்கு மேல் உயர்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours