கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட கலை இலக்கிய விழாவில், அறிவிப்புத்துறை , கலை, வானொலித்துறை என்பவற்றில் தடம்பதித்து காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும் சம்மாந்துறையைச் சேர்ந்த அம்சார் முஹம்மட் இன்சாப் கலைஞர் சுவதம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் அட்டாளைச்சேனை அல்-ஸகீ மண்டபத்தில் (10) இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவர், இலங்கை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் தற்போது சமூகப்பணி (சிறப்பு) இளம் கலைமாணி பட்டப்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, பேராதனைப் பல்கலையில் உளவியல் துறை கற்கை நெறியினையும் மேற்கொண்டு வருகின்றார். மேலும் வானொலி, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறர். மேலும் RJ Media ஊடக வலையமைப்பின் பணிப்பாளராக கலை இலக்கிய ஊடக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகுதான் வெற்றியென நிரூபித்துக் காட்டிய ஏ.எம்.இன்ஷாப், பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந் நிகழ்வின் போது பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, சிரேஷ்ட அண்ணாவியார் எம்.ஐ. அலாவுதீன் தலைமையிலான கோலாட்டக் குழுவினரின் பொல்லடி கலை நிகழ்ச்சியும் நிகழ்வில் அரங்கேற்றப்பட்டு, சபையோரின் பாராட்டையும் பெற்றதோடு, கலைஞர் சுவதம் விருது மற்றும் அம்பாறை மாவட்ட கலாசார நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். அன்ஸார், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அம்பாறை மாவட்ட உதவி செயலாளர் டபிள்யு.வி. செனவிரத்ன, கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ், பிரதேச செயலகங்களின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விமான்கள், சிரேஷ்ட கலைஞர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours