பாறுக் ஷிஹான்


அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன்  இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி  வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல  நாட்களாகப் பெய்து வரும்   மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால்   நெற் பயிர்கள்    அழுகும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours