(சுமன்)
மட்டக்களப்பு மயிலத்தமடு
மாதவணை மேய்ச்சற்தரைப் பகுதியில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடும்
அயல் மாவட்ட பெரும்பான்மைய இனத்தவரால் அங்கு கால் நடை வளர்ப்பில் ஈடுபடும்
பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு ஏற்படுத்தப்படும் இன்னல்கள், அழிவுகளுக்கு
எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும், மேற்படி பிரதேசத்தில் அத்துமீறிய
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அகற்றி தங்கள் கால்நடைகளை சுதந்திரமாக
மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தர வேண்டும்
என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப்
பொங்கல் தினமாக அனுஸ்டித்து ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில்
முன்னெடுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில்
மயிலத்தமடு பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில்
இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான
கோ.கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், மதத்தலைவர்கள்,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தங்களது கால்நடைகளுக்கான
மேய்ச்சற்தரை கோரிய பண்;ணையாளர்களின் போராட்டமானது கடந்த 126 நாட்களாக
முன்னெடுத்து வரும் நிலையில் கடந்த காலங்களில் மேற்படி மேற்ச்சற் தரையில்
கோலாகலமாகவும் பக்தியாகவும் தங்களின் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும்
முகமாக பட்டிப் பொங்கல் நிகழ்வினை பண்ணையாளர்கள் முன்னெடுத்து வந்த
நிலையில் இம்முறை அங்கு அத்துமீறிய விவசாயத்தில் ஈடுபவர்கள் தங்கள்
கால்நடைகளுக்கு இழைக்கும் அநியாயங்களை எதிர்த்து பட்டிப் பொங்கலைப்
புறக்கணித்து இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பச்சைத்
தரை எங்கும் இரத்தக் கறை என்ற மகுடவாசகத்துடன் பண்ணையாளர்கள் மேலாடையின்று
126 வெற்றுப் பொங்கல் பாணைகள் சகிதம் குறித்த ஆர்ப்பாட்டம் காந்திப்
பூங்காவில் ஆரம்பமாகி பின்னர் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று
அங்கு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
பிரதிநிதிகள், அரசியற் பிரதிநிதிகள் என்போருடன் அரசாங்க அதிபர்
கலந்துரையாடல் மேற்கொண்டு இறுதியில் பண்ணையாளர்களினால் மகஜரும்
கையளிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours