எமது பொதுச்சபை உறுப்பினர்களின் அயராத உழைப்பு, புலம்பெயர் நாடுகளிலும், உள்நாடுகளிலும் இருக்கின்ற தமிழர்களுடைய மன எண்ணங்கள், தீர்மானங்கள் அனைத்துமே வழங்கிய இந்த சந்தர்ப்பத்தை நானும் ஏனையோரும் இணைந்து ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நான் தெரிவாவதற்குக் காரணமாக இருந்த இறைவன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
ஜனநாயக ரீதியான கலந்துரையாடல் மற்றும் செயற்பாடுகள் ஊடாக வரலாற்று ரீதியான அத்தியாயத்தைப் படைத்திருக்கின்றோம். இது பலபேருக்கு பல நம்பிக்கைகளைத் தந்திருக்கின்றது. பல இளைஞர் யுவதிகளிடையே கட்சி பற்றிய அதீத அக்கறையைக் கொள்ள வைத்திருக்கின்றது.
இன்று என்னுடன் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எனது நண்பர்களான சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் நாங்கள் இணைந்து எமது கட்சியின் செயற்பாட்டை எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காகவும், தமிழ்த்தேசியத்தினுடைய ஒவ்வொரு அங்குல இருப்புக்காகவும் பொறுப்போடும் கடமையோடும் முன்னெடுப்போம்.
நாங்கள் ஏற்கனவே எங்களுடைய பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருத்தோம். எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது. தமிழ்த் தேசியத்தின் இருப்பு சார்ந்தது, எமது இருப்பின் அடிப்படை உரிமை சார்ந்தது. அந்த உரிமையைப் பலப்படுத்துவதற்காக நாங்கள் எங்களது கரங்களை ஒன்றாகப் பலப்படுத்துவோம்.
எமது பொதுச்சபை உறுப்பினர்களின் அயராத உழைப்பு, புலம்பெயர் நாடுகளிலும், உள்நாடுகளிலும் இருக்கின்ற தமிழர்களுடைய மன எண்ணங்கள், தீர்மானங்கள் அனைத்துமே எங்களுக்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது.
அந்த சந்தர்ப்பத்தை நானும் ஏனையோரும் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம். அதற்கான இந்த வாய்ப்பிற்காக அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours