(அஸ்லம் எஸ்.மெளலானா)


முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் சாய்ந்தமருது இல்லத்தை பொதுத் தேவைகள் மற்றும் கல்விச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு அவரது புதல்வரும் மயோன் குறூப் நிறுவனத்தின் தவிசாளருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

நாடு, சமூகம் மற்றும் பிராத்திய முன்னேற்றம் தொடர்பில் அதிக கரிசனையுடனும் தூரநோக்கு சிந்தனையுடனும் தனது பொருளாதாரத்தை அர்ப்பணிப்பு செய்து பல்வேறு சமூக நலத் திட்டங்களை இன, மத, பிரதேச பாகுபாடின்றி முன்னெடுத்திருந்த மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்கள் இளம் தலைமுறையினரின் கல்வி மற்றும் அவர்களது எதிர்காலம் குறித்து கடுமையாக சிந்தித்து, செயலாற்றி வந்திருந்தார்.

அன்னாரது உயரிய எண்ணங்களை நிறைவேற்றும் பொருட்டு, சாய்ந்தமருது மாவடி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தை, அவரது வஸியத்திற்கு அமைவாக பொதுத் தேவைகளுக்காக வக்பு செய்வதற்கு அவரது புதல்வர்களான றிஸ்லி முஸ்தபா, றம்லி முஸ்தபா, புதல்வியான றிஸ்னா முஸ்தபா, சகோதரரான கணக்காளர் எம்.எம். இப்றாஹிம் மற்றும் மருமகன் செய்ன் மர்சூக் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

இதன் பிரகாரம் ட்ரஸ்ட் எனும் நம்பிக்கையாளர் சபை ஒன்றை ஏற்படுத்தி சமூக நலத் திட்டங்களுக்கு அந்த இல்லத்தை பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக இக்கூட்டத்தில் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

இதையடுத்து பலரது பல்வேறுபட்ட கருத்துகளும் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், Myown Musthafa Education Resource Centre எனும் பெயரில் தொழில் வழிகாட்டலுடன் கூடிய கல்வி வள நிலையமொன்றை அமைப்பது தொடர்பிலான யோசனைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.

குறிப்பாக பாடசாலைக் கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யத் தவறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளையும்  தகவல் தொழில்நுட்பக் கல்வியையும் கற்பித்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறுவதற்குத் தகுதியான தேர்ச்சிமிக்க நபர்களாக  அவர்களைக் கட்டியெழுப்புவதற்கான கல்வித் திட்டமொன்றை அங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா மெளலவி, பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், சுங்கத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஏ.ஜெலீல், பாடசாலை அதிபர்களான யூ.எல்.நஸார், எஸ்.எம்.சம்சுதீன், ஓய்வுபெற்ற அதிபர்களான எம்.எம்.இஸ்மாயில், ஐ.எல்.ஏ.மஜீத், தென்கிழக்குப் பல்கலைக்கழக கணக்காய்வு உத்தியோகத்தர் கலீல் எஸ். முஹம்மத், கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரான நஜீமா ஜுவலர்ஸ் உரிமையாளர் எம்.எம். மன்சூர் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours