(எஸ்.அஷ்ரப்கான்)


மேம்பட்ட சுகாதார சேவைகளை எமது பிராந்தியத்தில் வழங்க  ஊடகங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வர வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.

மணிக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கலந்து கொண்ட  ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்    நேற்று (08) கல்முனையில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிரும் கலந்து கொண்டார்.

இங்கு வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் உரையாற்றுகையில்,

இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

மக்கள் சுகாதாரத்துறையினருக்கு முழுமையான  ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்கும்போதுதான் மேம்பட்ட சுகாதார சேவைகளை எமது பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த காலத்தில் குறிப்பாக கொரோனா காலத்தில் இரவு பகலாக ஊடகவியலாளர்கள் பணியாற்றியதை ஞாபகப்படுத்தி
 நினைவு கூர்வதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது பிராந்திய சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்காக ஊடகவியலாளர்களின் ஆரோக்கியமான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். சுகாதார மேம்பாட்டை முன்னெடுப்பதில்  பல சவால்களும் உள்ளது. அந்த சவால்களை வெற்றி கொள்ள மக்களை விழிப்பூட்டுவற்காக ஊடகவியலாளர்கள் சிரத்தையுடன் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

சுகாதாரத்துறையின் எழுச்சிக்காக பல்வேறு தரப்பினருடனும் தொடரான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில்தான் பெறுமதிமிக்க ஊடகவியலாளர்களையும் சந்திக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் சுகாதாரத்துறை சம்பந்தமான தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours