பாறுக் ஷிஹான்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்  ஒலுவில் வளாகத்தில்  நடைபெற்றது. 

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு  இணங்க, நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இருநாள் (28,29) தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2016ம் ஆண்டைய சம்பள சீர்திருத்தத்திற்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15% சம்பள அதிகரிப்பை வழங்க கோரல், மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரித்தல், பல்கலைக்கழக சேமலாப நிதியை வேறு தேவைகளுக்கு அரசாங்கம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் நீண்டகாலமாக காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேற்படி கோரிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி 2023.11.02 மற்றும் 2024.01.18 ஆகிய தினங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் அடையாள பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படாததன் காரணமாக இருநாள் தொடர் பணி பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெறுகின்றது. 

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வழங்கும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கச்செயலாளர் எம்.எம்.முகமது காமில் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 28, 29.02.2024ம் திகதிகளில் தென் கிழக்கு  பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகின்றது.

நேற்று 27.02.2024ம் திகதி இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் விஷேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி 
அது குறித்து கருத்துத்தெரிவித்த போதே காமில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது,

மேற்குறித்த தொழிற்சங்கப்போராட்டத்தில் ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்தல் வேண்டும். அதேபோல, இவர்களது வரவு தொடர்பாக அந்தந்தப் பகுதிகளுக்கான பிரதிநிதிகள் உரிய கரிசனை காட்டுதல் வேண்டும்.

முதலாவது நாள் (28) பல்கலைக்கழக நுழைவாயில் முன்றலிலும் இரண்டாவது நாள் (29) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீடத்தின் நுழைவாயிலிலும் எமது அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும்.

மேற்குறித்த இரு தினங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிப்பது முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதானது,

2016ம் ஆண்டைய சம்பள சீர்திருத்தத்தில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தியும், அறிக்கைகள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடாத்தியும் தீர்வு வழங்கப்படவில்லை.

அத்துடன் பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டும், பல்வேறுபட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் இன்றுவரை அவற்றுக்கான தீர்வுகள் அரசினால் வழங்கப்படாமலும் சம்பள அதிகரிப்புச் செய்யப்படாமலும் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. 

தற்போதைய கல்வி அமைச்சரின் ஏற்பாட்டில், 2024.01.22ம் திகதி நிதி அமைச்சின் சார்பில் நிதி ராஜாங்க அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பிரதிநிதிகள், மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தர உடன்பாடுகள் எட்டப்பட்டது மாத்திரமன்றி கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு திறைசேறி, கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த மூன்று வாரகாலம் 2024.02.13ம் திகதியுடன் நிறைவு பெற்றது.

இந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வறிக்கைக்கு அமைய, இதற்கான தீர்வுகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் 2024.02.19ம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அது நடைபெறவில்லை.

அதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது, அறிக்கை முடிவுகளை பரிசீலனை செய்யும் பொருட்டு மேலும் ஒரு வார காலக்கெடுவை ஆணைக்குழு கோரியிருந்தது. அந்தக் காலப்பகுதியினுள் தீர்வுகள் வழங்கப்படவில்லை. 

2024.02.26இல் நடைபெற்ற அமைச்சரவையில் ஊழியர்களின் பிச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அது நடைபெறாத நிலையில் இந்த இருநாள் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்களின் பங்குபற்றலுடன் நாளை (29) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours