யானையாலும் யானைகளாலும் அல்லலுறும் எம் மக்கள். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 07.03.2024. வன விலங்குகளினால் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற அவலநிலை பற்றி ஒத்தி வைக்கும் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கு பொறுப்பான அமைச்சர் இங்கு சமூகமளிக்காத போதும் என்னால் கூறப்படும் விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகின்றேன். எங்களது வடக்கு, கிழக்கு மக்களது பிரதான வாழ்வாதாரமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என்பன உள்ளன. விவசாயிகளுக்கு கடந்த தசாப்தங்களாக காட்டு யானைகளுடைய தொல்லை மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இப் பிரச்சனைகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்க முடியும். சில வேளைகளில் நான் கள விஜயம் மேற்கொண்டு இது தொடர்பில் வன விலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கும் போது அவர்கள் இப் பிரச்சனைகளை தீர்க்க அதற்குரிய வாகனங்கள், ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்ட மண்டூர், வவுணதீவு, போரதீவு பற்று போன்ற பல பிரதேசங்களில் பல காட்டு யானைகள் ஆபத்தினை ஏற்படுத்துகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வவுணதீவு பிரதேசத்தில் 40 காட்டு யானைகள் காணப்பட்டன. இவற்றை கூறிய போது மாவட்டத்தில் அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் “40 யானைகளை எண்ணினீர்களா?” என அலட்சியத்துடன் கேட்டார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது “ஒரு இலட்சம் Km யானை வேலி அமைப்போம்” எனக் கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று வரை இந்த காட்டு யானைகளின் பிரச்சனைக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. யானைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்; மக்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி இதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கமும், அபிவிருத்தி குழு தலைவர்களாக செயற்படும் வியாபாரிகளும் இதற்கு எவ்வித தீர்வினையும் இன்று வரை கொண்டு வரவில்லை.


காட்டு விலங்குகளின் பிரச்சனையால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை விட பெரிய பிரச்சனையாக இன்று மக்களுக்கு இருப்பது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அரசியலை மீள ஆரம்பிக்க இருப்பது. பிறரின் சதித்திட்டத்தினாலேயே நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என கோட்டாபய ராஜபக்ஷ கூறினாலும்; அவரது தவறான தீர்மானங்கள், முட்டாள் தனமான செயற்பாடுகளினாலேயே அவர் பதவியிலிருந்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்திருந்தார். 2022ம் ஆண்டிலிருந்து ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். ஆனால் நாங்கள் கூறிய விடயங்களுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளை கையளிக்க வேண்டுமெனக் கூறியும் எந்த நடவடிக்கைகளும் அதற்கு எடுக்கப்படவில்லை. “பாராளுமன்றத்தினூடாக மாகாணங்களுக்கு பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள கையளிப்போம்” என இரு வருடங்களாக கூறியும் இன்று வரை அது வழங்கப்படவில்லை. Online Safety Bill போன்ற தமக்குத் தேவையான காரியங்களை நடைமுறைப்படுத்தும் நீங்கள் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை வழங்க மறுக்கின்றீர்கள். மக்களது அன்றாட பிரச்சனைக்கும் தீர்வு இல்லை, தேசிய ரீதியான இனப் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours