(சுமன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின் முயற்சியின் பயனாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகளுக்காக மாகாண மீன்பிடித் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தினை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்போது உள்ள அலுவலகம் இடம்போதாமை காரணமாக கல்வி அதிகாரிகளால் பலரிடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தும் எந்த பயனும் அற்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அவரால் எடுக்கப்பட்ட முயற்சியின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஒத்துழைப்புடன் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அருகாமையில் பயன்பாடற்று இருக்கும் மாகாண மீன்பிடித் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தை வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக கடந்த 13ம் திகதி புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, விவாசாய மீன்பிடி அமைச்சின் செயலாளர் முத்துபண்டா, மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா, மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கென நிரந்தர கட்டிடம் அமையும் வரையில் குறித்த மீன்பிடி திணைக்களத்திற்குரிய கட்டிடத்தினைப் பயன்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் குறித்த கட்டிடம் இன்றைய தினம் கல்வித் திணைக்களத்திற்கு உத்தியோக பூர்வமாகக் கையளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் R.உதயகுமார், கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்கள அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் அ.ரதன், பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன், திருக்கோவில் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் R.W.கமலராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours