நூருல் ஹுதா உமர் 


எனது வகுப்பு தோழர் டாக்டர் அல் அமீன் றிசாட் அவர்கள் காலமான செய்தியறிந்து பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளேன். சாய்ந்தமருது மண்ணில் பிறந்த என் நண்பர் டாக்டர் அல் அமீன் றிசாட் கண் விசேட மருத்துவ நிபுணராக திகழ்ந்து நாட்டின் பல்வேறு பாகங்களிலும் சேவையாற்றி தனது பிறந்த மண்ணுக்கும் சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்து சுகாதார மேம்பாட்டுக்கும் கடுமையாக உழைத்தவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார் 

அந்த செய்தியில் மேலும், சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தில் உப தலைவராக இருந்து சாய்ந்தமருது மண்ணின் அபிவிருத்தி, முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தவர். எனது வகுப்பு தோழன் என்ற உரிமையுடன் எனக்கு அவர் முன்வைத்த ஆலோசனைகள் என்றும் மறக்க முடியாதவை.

எனது முன்னேற்றங்களில் உளமார மகிழ்ந்து வாழ்த்தியதுடன் எனது உடன்பிறவா சகோதரன் போன்று எனது சுக, துக்கங்களில் பங்குகொண்ட எனது நண்பன் டாக்டர் அல் அமீன் றிசாட் அவர்களின் இழப்பு செய்தி என்னுள் தாங்க முடியாத கவலையை தோற்றுவித்துள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை 1990 Batch மாணவ நண்பர்களை ஒன்றுதிரட்டி ஒருங்கிணைத்து தலைமை தாங்கிய நண்பன் டாக்டர் அல் அமீன் றிசாட் சிறந்த முறையில் நட்பு பாராட்ட கூடியவர் என்பதுடன் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்தார்.

மென்மையான சுபாவம் கொண்ட அவர் மக்களை தனது அன்பான போக்கினால் அரவணைத்தவர். மட்டுமின்றி எங்களின் நண்பர் வட்டத்திலும் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார். அவரின் இழப்பால் துயறுற்றுள்ள அவரின் மனைவி, மக்கள், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் இறைவன் ஆறுதலை வழங்கிட பிரார்த்தனை செய்கிறேன்.

எனது நண்பனின் நல்லமல்களை, சமூக பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்ளவும், மறுமை ஈடேற்றத்திற்காகவும் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைத்திடவும் இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன். (ஆமீன்) என்று தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours